கெடுபிடி மேல் கெடுபிடி....’சர்கார்’ படத்துக்கு அதிக கட்டணம் வசூலித்தால்...? அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை!

By vinoth kumarFirst Published Nov 2, 2018, 5:22 PM IST
Highlights

அதிக கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.’ என்றார் கடம்பூர் ராஜூ.

வரிசையாய் வரும் கோர்ட் உத்தரவுகள் அனைத்தும் விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் சங்கை நெறித்துவரும் வேளையில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும் சன் பிக்சர்ஸ் மற்றும் விஜய்க்கு எதிராக களம் இறங்கினார். 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ' திரையரங்குளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுத்து அரசு முறைப்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க பல்வேறு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஸ்டார் வேல்யூ’ என்று கூறும் நடிகர்கள்,  தங்கள் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட வேண்டும். இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரிய பட்ஜெட்’, ஸ்டார் வேல்யூ’ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படம் எதுவாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படும் என அரசும் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் தெரிவித்துள்ளது. எனவே, அதிக கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.’ என்றார் கடம்பூர் ராஜூ.

 

தீபாவளிக்கு வெளியாகும் ஒரே ஸ்டார் வேல்யூ படம் விஜயின் ‘சர்கார்’ மட்டுமே என்பதால் ஆளும் அ.தி.மு.க. அரசு நடிகர் விஜய்க்கு எதிராக மேற்கொள்ளும் அரசியல் தாக்குதல் என்றே இதை எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனெனில் இதற்குமுன் வெளியான எந்தப்படத்திற்கும் இவ்வளவு கெடுபிடிகள் காட்டப்படவில்லை.

click me!