ஸ்டேட்டை தாண்டி சென்ட்ரலுக்கு எதிர்ப்பு காட்டும் சூர்யா... இன்றே கடைசி நாள் என ஆவேசம்...!

By Kanimozhi PannerselvamFirst Published Jul 2, 2021, 2:47 PM IST
Highlights

மத்திய அரசின் ஒளிபரப்பு சட்ட வரைவு 2021க்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
 

ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 18-ம் தேதி வெளியிடப்பட்டதில் இருந்தே இந்தியா முழுக்க உள்ள பல திரைக் கலைஞர்கள் தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். ஜூலை 2ம் தேதி வரை புதிய சட்ட திருத்த வரைவின் மீதான கருத்துகள் கேட்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றிமாறன், அனுராக் காஷ்யப், நந்திதா தாஸ், பர்ஹான் அக்தர் உள்ளிட்ட 1400 கலைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர்.

தணிக்கை சான்றிதழ் தொடர்பாக முடிவெடுக்கும் உச்ச அதிகாரம் மத்திய அரசுக்கு இருப்பது உள்ளிட்ட அம்சங்கள் திரையுலகிற்கு பாதகமாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் சினிமா, ஊடகம், கல்வி ஆகிய மூன்றும் இந்தியாவில் பலரும் அறிந்த மூன்று குரங்குகளாக மட்டுமே இருக்க முடியாது எனவும், அதனால், வரவிருக்கும் தீமைக்கு எதிராக குரல் கொடுப்பதே ஜனநாயகத்தை காக்கும் சிறந்த மருந்தாக இருக்கும் எனவும் குறிப்பிட்டு புதிய ஒளிபரப்பு சட்ட திருத்த வரைவிற்கு எதிரான தன் நிலைப்பாட்டை தெரிவித்திருந்தார். 

தற்போது தமிழ் திரையுலகின் முன்னணி  நடிகரான சூர்யா ஒளிபரப்பு சட்ட வரைவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காக... அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல... சட்ட வரைவு குறித்து கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னதாக நீட் தேர்வு குறித்த பிரச்சனைகளுக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த சூர்யா, தற்போது தன்னுடைய துறை சார்ந்த ஒளிபரப்பு சட்ட வரைவு குறித்த பிரச்சனைக்கும் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

tags
click me!