பற்றி எரியும் காட்டுத்தீ.. உயிரினங்கள் அழியும் அபாயம் ..வீடியோ வெளியிட்ட நடிகர் கார்த்திக்..

By Thanalakshmi VFirst Published Mar 13, 2022, 5:21 PM IST
Highlights

நாம் அனைவரும் னவே காட்டுத்தீக்கு எதிரான போரில் வனத்துறையோடு இணைந்து செயல்படுவோம் என்று நடிகரும் இயற்கை ஆர்வலருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.
 

திண்டுக்கல் மாவட்டம், பெருமாள்மலை வனப்பகுதிகளான தோகைவரை, மயிலாடும்பாறை, மச்சூர் உள்ளிட்ட வனப்பகுதிகளில் கடந்த வியாழக்கிழமை இரவு திடீரென பற்றிய காட்டுத் தீ அதிக வேகத்துடன் பரவி வருகிறது. இதில் 500 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள், புல்வெளிகள், உயிரினங்கள் தீக்கிரையாகியுள்ளன. வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து தீ தடுப்பு எல்லைகளை ஏற்படுத்தி தீயினை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி என்பதால் தொடர்ந்து வீசும் சூறைக்காற்றால் தீயின் வேகம் மேலும் அதிகரித்து, பல்வேறு இடங்களுக்கு பரவி வருகிறது. மேல்மலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. 300 ஏக்கர் பரப்பளவில் பரவிய காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.பகல் இரவு பாராமல் போராடி வரும் வனத்துறையினர், தீயை அணைக்க முடியாமல் தவித்து வருகின்றனர். தொடர்ந்து எரியும் காட்டுத்தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்து காணப்படுகிறது.காடுகளில் வாழ்ந்து வரும் ஏராளமான வனவிலங்குகள், பூச்சியினங்கள், பறவைகள் உள்ளிட்ட உயிர்னங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. 

வனப்பகுதிகளில் தீத்தடுப்பு கோடுகள் அமைக்கவும், காட்டுத் தீ பரவாமல் இருப்பதற்கும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்தாண்டு நிதி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் வனப்பகுதியில் எரியும் பயங்கர காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் உயிரை பணயம் வைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். இதனிடையே உயரமான மலைப் பகுதியில் தீயை கட்டுப்படுத்த வெளிநாடுகளில் உள்ளது போல ஹெலிகாப்டர் மூலம் ரசாயன பவுடர் துாவி கட்டுப்படுத்த வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் காட்டுத்தீ குறித்து நடிகர் கார்த்திக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோ கொடைக்கானல் வனவிலங்கு சரணாலயம் சார்பில் எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று உருக்கமாக பேசியுள்ளார். 

மேலும் பேசும் அவர், கோடை வெயிலுக்கு இதம் அளிக்க இயற்கை தந்த கொடை தான் கொடைக்கானல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இது ஒரு கனவு பிரதேசம் என்று தான் சொல்ல வேண்டும். கொடைக்கானல் வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. எளிதில் பற்றிக்கொள்ளும் நிலைமையில் இருக்கும் காடுகளில், ஒரு சின்ன தீப்பொறி பட்டால் போது காடோடு சேர்த்து அனைத்து உயிரினங்களும் அழித்து போகும் அபாயம் இருக்கிறது. என்வே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  காட்டுத்தீக்கு எதிரான இந்த போரில் வனத்துறையோடு இணைந்து இருக்க வேண்டும் என்று வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீயால் பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே காட்டுத்தீக்கு எதிரான போரில் வனத்துறையோடு இணைந்து செயல்படுவோம் என்று நடிகரும் இயற்கை ஆர்வலருமான கார்த்திக் தெரிவித்துள்ளார். pic.twitter.com/rFJUuC8z7l

— Asianetnews Tamil (@AsianetNewsTM)
click me!