இஞ்சாருடா! ‘தல’ இனிமே ‘தலைவர்’ அஜித் ஆகிடுவார் போலிருக்குதே? இறங்கி அடிச்சாருன்னு வெய்யி டெல்லி வரைக்கும் அல்லு தெறிக்கும்!

By ezhil mozhiFirst Published Jan 22, 2019, 7:04 PM IST
Highlights

அஜித் என்னவோ ‘இல்லை’ என்றுதான் அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் அவரது ரசிகர்கள் துவங்கி அமைச்சர்கள் வரை அத்தனை பேரும் ‘இருக்குது! இருக்குது!’ என்றே அடித்துச் சொல்கிறார்கள். 

இஞ்சாருடா! ‘தல’ இனிமே ‘தலைவர்’ அஜித் ஆகிடுவார் போலிருக்குதே? இறங்கி அடிச்சாருன்னு வெய்யி டெல்லி வரைக்கும் அல்லு தெறிக்கும்: தாறுமாறு சந்தோஷத்தில் தாண்டவமாடும் தல ரசிகர்கள். 

அஜித் என்னவோ ‘இல்லை’ என்றுதான் அறிக்கை விட்டிருக்கிறார். ஆனால் அவரது ரசிகர்கள் துவங்கி அமைச்சர்கள் வரை அத்தனை பேரும் ‘இருக்குது! இருக்குது!’ என்றே அடித்துச் சொல்கிறார்கள். யெஸ்! அஜித்தை அரசியல்வாதி ஆக்கிப் பார்க்காமல் அடங்க மாட்டார்கள் போல. 

அஜித்தின் சினிமா கிராபில் ‘விஸ்வாசம்’ படம் மிகப்பெரிய திருப்புமுனைப் படம். காரணம், ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருந்த அஜித்துக்கும் இந்தப் படம் வெறித்தனமான வெற்றியை தந்திருக்கிறது. அதேப்போல, திருப்திகரமான வசூலுக்கு காத்திருந்த அஜித்தின் தயாரிப்பாளருக்கும் விஸ்வாசம் படமோ தாறுமாறான வசூலை அடைமழையாய்ப் பொழிந்து கொண்டிருக்கிறது. 

இதெல்லாம் திகட்டத் திகட்ட சந்தோஷம்தான் தல!-க்கு என்றாலும் அதையும் தாண்டி இந்தப் படத்தின் மூலம் மற்றொரு பரிமாணத்துக்குள் அஜித் வந்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ஆம் இது நாள் வரையில் ‘தல’ அஜித்தாக இருந்தவர், இந்தப் படத்தின் மூலம் ‘தலைவர்’ ஆக ப்ரமோஷன் படுத்தப்படுகிறார். 

விஸ்வாசம் படமானது, ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்துடன் சக போட்டி சினிமாவாக மோதி, தாறுமாறான சாதனையை வசூலிலும், வரவேற்பிலும் நிகழ்த்தியிருக்கிறது. அது தனிக்கதை. அதேவேளையில், சினிமாவில் ரஜினியை ஜெயிக்க வைத்த அஜித்தின் ரசிக படைபட்டாளம், அவரை அரசியலிலும் இழுத்துவிட மிக மும்முரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு ஒத்திசைவாக சில ஊடகங்களும் செய்திகளைக் கொளுத்திப் போட பரபரப்பு பிய்த்துக் கொண்டது. 

விளைவு, நேற்று அஜித்தே அறிக்கை விடுமளவுக்கு சூழல் போய்விட்டது. “எனக்கு என்றுமே நேரடியாகவொ, மறைமுகமாகவோ அரசியல் ஆசை இல்லை.” என்று தல நீண்ட அறிக்கையை விட்டுவிட்டார். இதன் மூலம் தல யின் ரசிக குஞ்சுகளின் ஆட்டம் அடங்கிப்போய்விடும் என்றுதான் நினைத்தார்கள் அவரது சினிமா போட்டியாளர்களும், சில கட்சி முக்கியஸ்தர்களும். 

ஆனால் ’அரசியல் ஆசையில்லேன்னு சொல்றதே ஆசை இருக்குதுங்கிறதுதான்! அவர்தான் ஆசை நாயகனாயிற்றே’ என்று புது ரூட்டை தூக்கிப் பிடிக்க துவங்கிவிட்டார்கள் ரசிகர்கள். ”தலை இப்படி சொல்லிட்டாரேன்னு நாம சோர்ந்து விட்டுட வேண்டாம். நல்லா கவனியுங்க விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ன்னு எல்லாருமே துவக்கத்துல அரசியல் ஆசை இல்லைன்னு சொன்னவங்கதான். ஆனா அதுக்கப்புறம்  திகுதிகுன்னு வந்து நிக்கலையா அரசியலுக்குள்ளே! அதனால கூடிய சீக்கிரம் நம்ம தலயும் வருவார். அவரை வர வைக்கணும் நாம.” என்று தமிழகம் முழுவதுமே பரவலாக அஜித்தின் ரசிகர்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சோஷியல் மீடியா வழியாக தீர்மானமே போட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். 

சரி அஜித்தின் ரசிகர்கள்தான் இப்படியென்றால் ஆளும் அரசியல்வாதிகள் தரப்பும் இதற்கு இணையாகவே அஜித்தை தூண்டிக் கொண்டிருக்கிறது அரசியலை நோக்கி. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரெல்லாம் இன்று தனது பரபர பேட்டியின் நடுவில், அஜித்தின் அறிக்கையை சிலாகித்துப் பேசி அவருக்கு ஐஸ் வைக்க தவறவில்லை. இதற்கிடையில் ‘அஜித் எப்போதுமே அ.தி.மு.க.வின் செல்லப்பிள்ளைதான்.’ என்று நேற்று ஏஸியாநெட் தமிழ் இணையதளம் எடுத்துக் கொடுத்த பாயிண்டை ஆளாளுக்குப் பிடித்து ‘ஆமாம்ல!’ என்று வழிமொழிந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆக சினிமா வெற்றிக்குப் பிறகு அஜித்துக்காக ஓப்பனாகியிருக்கும் இந்த அரசியல் கோட்டை திறப்பு அவரது ரசிகர்களை குதூகலமாக்கி இருக்கிறது. ‘தல இறங்கி நின்னாருன்னு வெய்யி, டெல்லி வரைக்கும் அரசியல் அல்லு தெறிக்கும்’ என்று செம்ம கெத்தாய் சவுண்டு கொடுக்கிறார்கள். அதேவேளையில், ” மன்றங்களை கலைச்ச பிறகும் இந்த மனுஷனுக்கு இப்படி பல லட்சக்கணக்கான ரசிகர்கள் குவியுறாங்க. பொதுவான சினிமா ரசிகர்களும் இவரோட படத்துக்கு வரிசை கட்டி நிக்குறாங்க. இவரு அரசியலுக்கு வந்தால்  இதே வரவேற்பு டபுள் ஆகுமே!” என்று கட்சிகளும் கணக்குப் போட துவங்கிவிட்டனர். இஞ்சாருடா !

click me!