கடந்த ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
கொரோனா கொடுந்தொற்று காரணமாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் 2019ம் ஆண்டுக்குப் பிறகு நடத்த முடியவில்லை. இந்நிலையில், மூன்றாண்டுகள் கழித்து, 24.07.2022 அன்று இதற்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, 24.03.2023 அன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதற்கான காலிப் பணி இடங்கள் 10,117 என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
undefined
மூன்றாண்டுகள் தேர்வுகள் நடத்தப்படாத நிலையை கவனத்தில் கொண்டு, பறிபோன 30,000 பேருக்கான வேலைவாய்ப்புகளையும் இணைத்து, அவைகளுக்கான தேர்வையும், கலந்தாய்வையும் இந்த ஆண்டிலேயே நடத்த வேண்டும் என்று கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். பல்வேறு அரசு ஊழியர்களும் ஓய்வு பெற்றிருக்கும் நிலையில் தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கிறது.
கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைபிஸ்ட், ஸ்டேனோ டைபிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் ஆகிய பணியிடங்களும் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. தமிழகத்தில் குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த காலிப் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.
இத்தேர்வை 15 லட்சம் பேர் எழுதினர். முதலில் 7,301 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டது. அதன் பின்னர் மறு அறிவிப்பாணை வெளியிடப்பட்டு 10,117 காலிப் பணியிடங்களுக்கு தகுதியுடையோர் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.
இந்த நிலையில், இரண்டாவது முறையாக குரூப் 4 காலிப்பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த முறை திருத்தியமைக்கப்பட்ட குரூப் 4 காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 10,117ஆக இருந்த நிலையில், தற்போது 10,748ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி முந்தைய காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை விரைவில் உயர்த்தப்படலாம் என்றும் கூறப்படுகிறது. டிஎன்பிஎஸ்சியின் இந்த அறிவிப்பு போட்டித்தேர்வர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.