
மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் டிசம்பர்20ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force) 1983ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆயுதமேந்திய மத்திய காவல் படைகளுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை இராணுவப்படையாகும். அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதான சின்னங்கள் போன்றவைகளை பாதுகாக்கிறது. இதன் தலைமை செயலகம் டெல்லியில் உள்ளது. இந்தப் படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது.
இதையும் படிங்க;- DRDO-வில் வேலைவாய்ப்பு... விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!!
இந்நிலையில், மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (சி.ஐ.எஸ்.எப்) 787 கான்ஸ்டபிள், டிரேட்ஸ்மேன் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பந்தப்பட்ட பணி சார்புடைய தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 18 முதல் 23 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். எழுத்துத் தேர்வு, திறனறி தேர்வு, ஆவண சரிபார்ப்பு, மருத்துவத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் நவம்பர் 21 முதல் டிசம்பர் 20ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப நடைமுறை பற்றிய விரிவான விவரங்களை www.cisf.gov.in என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க;- மாதம் 2 லட்சம் வரை சம்பளம்..டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அசத்தலான வேலைவாய்ப்பு அறிவிப்பு !