wpi inflation: ஆர்பிஐக்கு தலைவலி! 13வது மாதமாக ஏப்ரலிலும் மொத்தவிலைப் பணவீக்கம் இரட்டைஇலக்கமாக உயர்வு

By Pothy RajFirst Published May 17, 2022, 3:34 PM IST
Highlights

wpi inflation : நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 13-வது மாதாக ஏப்ரலிலும் இரட்டை இலக்கத்தில் அதிகரித்துள்ளது. ஏப்ரலில் 15.08 சதவீதமாக மொத்தவிலைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் தொடர்ந்து 13-வது மாதாக ஏப்ரலிலும் இரட்டை இலக்கத்தில் அதிகரித்துள்ளது. ஏப்ரலில் 15.08 சதவீதமாக மொத்தவிலைப் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

ஏற்கெனவே சில்லரை விலைப் பணவீக்கம் 7.79 சதவீதமாக ஏப்ரலில் உயர்ந்துவிட்டது. இது ரிசர்வ் வங்கியை மேலும் வட்டிவீத உயர்வை அதிகரிக்க வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது மொத்தவிலைப் பணவீக்கமும் 15 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது ரிசர்வ் வங்கிக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஏற்கெனவே ரிசர்வ் வங்கி 40 புள்ளிகளை ரெப்போ ரேட்டில் உயர்த்தியுள்ளது. மொத்தவிலைப் பணவீக்கமும், சில்லரை விலைப் பணவீக்கமும் உயர்ந்திருப்பதால், அடுத்துவரும் ஜூன் மாத நிதிக்கொள்கைக் குழுக் கூட்டத்தில் வட்டிவீதத்தை உயர்த்த வேண்டிய நிலையில் ரிசர்வ் வங்கி உள்ளது. 

கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் நாட்டின் மொத்தவிலைப் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் 10.74 சதவீதமாக இருந்தது. 
மத்திய தொழில்துறை அமைச்சகம் சார்பில் மொத்தவிலைப் பணவீக்க விவரங்கள் வெளியிடப்பட்டன. இதில் “ காய்கறிக்கான மொத்தவிலைப் பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 23.24 சதவீதமாக அதிகரித்துள்ளது, இது உணவுப்பணவீக்கத்தை 8.35 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

எரிபொருட்களுக்கான பணவீக்கம் 38.66 சதவீதம் உயர்ந்துள்ளது, உற்பத்தி பொருட்களுக்கான பணவீக்கம் 10.85 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஏப்ரலில் உணவுப் பணவீக்கம் 8.38 சதவீதமாகவும், சமையல் எண்ணெய் 17.3 சதவீதமும், காய்கறிகள் விலை 15.4 சதவீதமும் அதிகரித்தது. 

முதலீட்டு வங்கியான மோர்கன் ஸ்டான்லி கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் “ ஆசியாவில் இந்தியாதான் பணவீக்கத்தால் அதிகமாக பாதிக்கப்படும் நாடாக இருக்கிறது. பெரும்பாலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால், இறக்குமதி செலவு அதிகரிக்கும்போது, இயல்பாகவே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து, பணவீக்கத்தை தூண்டும். இறக்குமதியால் நடப்புக்கணக்குப் பற்றாக்குறை இடைவெளியும் அதிகரிக்கும்.  ஆதலால், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி 6 சதவீதம் வரை உயர்த்த வேண்டும்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!