
கிரிப்டோகரன்ஸிகளை நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் விளம்பரம் செய்யத் தடைவிதிக்க பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற நிலைக்குழு
கிரிப்டோ மற்றும் டிஜிட்டல் சொத்துக்கள் குறித்து விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் அது தொடர்பான சட்டவிதிமுறைகளையும் தெரிவிக்க வேண்டும் என்று செபி நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அளித்த தனது பரி்ந்துரையில் தெரிவித்துள்ளது
நிதிஅமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டம் கடந்த மாதம் நடந்தது. இதில் கிரிப்டோகரன்ஸிகளை ஒழுங்குபடுத்துவது குறித்து கேள்விகளை நிலைக்குழு உறுப்பினர்கள் எழுப்பி இருந்தது. இதற்கு பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி சார்பில் விளக்கமும், பரிந்துரையும் அளிக்கப்பட்டன.
இது தவிர கிரிப்டோ கரன்ஸிகளை விளம்பரம் செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விளம்பர தரநிர்ணய கவுன்சில்(ஏஎஸ்சிஐ) வெளியி்ட்டிருந்தது. இதுவும் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் அளி்கப்பட்டது.
தடை
நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் செபி அளித்த பரி்ந்துரையில் “ கிரிப்டோகரன்ஸிகள் அனைத்தும் ஒழுங்குமுறைக்குள் கொண்டுவரப்படவில்லை. பிரபலங்கள், நடிகைகள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் கிரிப்டோகரன்ஸிகளை ஆதரித்து விளம்பரங்களில் நடக்கவும், அதை பரிந்துரைக்கவும் தடை விதிக்க வேண்டும்.
ஒருவேளை பிரபலங்கள் கிரிப்டோவிளம்பரங்களி்ல் நடித்து அதன்மூலம் மக்களுக்கு ஏதேனும் இழப்புகள் ஏற்பட்டால் அதற்கு விளம்பரங்களில் நடித்த பிரபலங்களை பொறுப்பாக்க வேண்டும். அவர்கள மீது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் அல்லது வேறு எந்தச் சட்டத்திலாவது நடவடிக்கை எடுக்கலாம்.
கிரிப்டோ கரன்ஸிகளின் மதிப்பு கடும் ஏற்ற இறக்கம் கொண்டது என்பதால், நுகர்வோர் நலனுக்கு உகந்தது அல்ல. இந்த விளம்பரங்களுக்கும், கிரிப்டோக்களுக்கும் முழுமையான உத்தரவாதம் அளிக்க முடியாது” எனத் தெரிவித்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.