மாதம் ரூ. 25 ஆயிரம் சம்பளம் வாங்குறீங்களா..? அப்போ நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்!

By Asianet TamilFirst Published May 23, 2022, 8:38 AM IST
Highlights

 ஒட்டுமொத்த இந்தியர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே ஓராண்டுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் வருவாய் ஈட்டினால், அதிக வருமானம் பெறும் பிரிவில் வருகிறது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வுகள் இருப்பது குறித்து ‘இன்ஸ்டிடியூட் ஆஃப் காம்பெடிடிவ்னெஸ்’ என்ற நிறுவனம் 'இந்தியாவில் சமமற்ற மாநிலம்’ (State of Inequality in India) என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில், இந்தியாவில் 10 சதவீதம் பேரே மாதம் 25 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவில் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் 10 சதவீதத்தினர் கீழ் வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 25 ஆயிரம் வருவாய் ஈட்டினால் அதிக வருமானம் என்கிறது அறிக்கை. ஒட்டுமொத்த இந்தியர்களில் 3 சதவீதம் பேர் மட்டுமே ஓராண்டுக்கு 25 லட்சம் ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டுவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களில் 41.59 சதவீதம் பேர் மாதச் சம்பளத்துக்கு வேலை செய்வோர் என்றும் 43.99 சதவீதம் பேர் சுய தொழில் செய்து வருவதாகவும் அறிக்கை சொல்கிறது. பெண்களை விட ஆண்களே அதிக வருமானம் ஈட்டுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தியாவில் மேல் மட்டத்தில் உள்ள ஒரு சதவீதத்தினர், ஒட்டு மொத்த இந்தியாவில் 5 முதல் 7 சதவீத வருமானத்தை ஈட்டும் நிலையில் 15 சதவீதம் பேர் 5 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக மாதச் சம்பளம் பெறுவதாக அதிர்ச்சி தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மேல் மட்டத்தில் உள்ளவர்களின் வருமானம் அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், கீழ் நிலையில் உள்ளவர்களின் வருமானம் குறைந்து கொண்டே செல்வதாகவும் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 54.9 சதவீத குடும்பத்தினர், செல்வ விகித அடிப்படையில் மிகவும் அடிமட்டத்தில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமப் புறங்களில் வருமான ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக உள்ளது என்றும் அறிக்கை கூறுகிறது. கடந்த 8 ஆண்டுகளில் (2011 -2019 காலகட்டம்) 12.3 சதவீதம் பேரின் ஏழ்மை நிலை குறைந்திருந்தாலும், அன்று இருந்த வேகத்தை  விட தற்போது அந்த வேகம் குறைந்துவிட்டது என்றும் உலக வங்கி கூறுவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அறிக்கையில் இறுதியில், ‘வளர்ச்சியின் பலன்கள் அனைவருக்கும் சமமாக பிரித்து தரப்பட வேண்டும். ஏற்றத்தாழ்வுகள் உளவியல் ரீதியாகப் பாதிப்புகளை ஏற்படுத்தும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை களைய தேசிய ஊரக வேலைத் திட்டத்தை நகர்புறப் பகுதிகளிலும் அமல்படுத்த வேண்டும், அடிப்படை வருமானத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

click me!