
mangoes online: ரசாயன முறையில் பழுக்கவைக்காத, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சுவையான மாம்பழங்களை தோட்டத்திலிருந்தவாறே வாடிக்கையாளர்களின் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் பணியை கர்நாடக அஞ்சல்துறை சிறப்பாகச் செய்து வருகிறது.
கோலார், சிக்காபல்லப்பூர், ராமநகரம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த மாம்பழங்களை அஞ்சல்துறையின் விரைவுதபால் மூலம் மாம்பழம் வேண்டுவோருக்கு அனுப்பி வைக்கிறார்கள்.
கர்நாடக மாம்பழ மேம்பாடு மற்றும் விற்பனைக் கழகம் சார்பில், உருவாக்கப்பட்ட கர்சரி மாம்பழத் திட்டத்தின் பகுதியாக அஞ்சல்துறையுடன் இணைந்து இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்தத் திட்டத்தில் இடைத்தரகர்கள் யாருமின்றி, மாம்பழங்களை நல்லவிலைக்கு வாடிக்கையாளர்களுக்கு விவசாயிகள் அனுப்பி வைக்கிறார்கள். ஆன்-லைன் மூலம் பெறப்படும் ஆர்டர்களுக்கு ஏற்ப அட்டைப்பெட்டிகளில் மாம்பழங்கள் அடைக்கப்பட்டு தபால்துறை மூலம் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படுகிறது
இந்த திட்டம் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் விளைப் பொருட்களுக்கு நல்ல விலைப்பெற முடியும், வாடிக்கைாயளர்களுக்கு ரசாயன கலப்பில்லாத சத்தான சுவையான மாம்பழங்கள் கிடைக்கும். தோட்டத்திலிருந்து பறிக்கப்பட்ட மாம்பழங்கள் சந்தைக்கு செல்லாமல் நேரடியாகவே வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
கொரோனா தொற்று காலத்தில் அஞ்சல் துறை மூலம் செயல்படுத்தப்பட்ட
இந்த மாம்பழத் திட்டத்துக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. மாம்பழங்கள் ஆர்டர் செய்யப்பட்ட அதேநாள் அல்லது மறுநாளுக்குள் பெங்களூரு நகர்முழுவதும் டெலிவரி செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்கள் http://karsirimangoes.karnataka.gov.inஎன்ற இணையதளம் மூலம் பல்வேறு வகையான மாம்பழங்களை ஆர்டர் செய்யலாம்.
3 கிலோ எடை கொள்ளளவு பிடிக்கும் பெட்டிகளில் அடைக்கப்படும் மாம்பழங்களில் பதாமி, சிந்துரா, ரஸ்புரி, பங்கனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு வகையான மாம்பழங்கள் விற்கப்படுகிறது.
நாட்டிலேயே மாம்பழங்கள் அதிகமாக விளைவிக்கும் மாநிலங்களில் உ.பி., மகாராஷ்டிராவுக்கு அடுத்தார்போல் கர்நாடாக திகழ்கிறது. 15 மாவட்டங்களில் 1.8லட்சம் ஹெக்டேர் நிலத்தில் 100 வகையான மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. கோலார், சிக்காபல்லபூர், தும்கூரு, ஹசன், பெங்களூருஊரகம், பெங்களூரு நகர்புறம், பெலகாவி, தார்வாட், ஹாவேரி, சித்ரதுர்கா, சிக்மங்களூரு, பிதார், ராய்சூர், கலாபுர்கி, ராமநகரா ஆகியமாவட்டங்களில் மாம்பழம் பிரதானமாக விளைவிக்கப்படுகிறது.
ராமநகராவில் மட்டும் பதாமி, சிந்தூரா,ராஸ்புரி வகை மாம்பழங்களும், தார்வாட்,பெலகாபவி, ஹாவேரி, கடாக், கொப்பல் ஆகியவற்றில் அல்போன்ஸா, பதாமி வகை மாம்பழங்களும், கோலார், சிக்காபல்லபுராவில் பங்கனப்பள்ளி, பதாமி, மல்லிகா, தோடாபுரி, நீலம் வகை மாம்பழங்களும் விளைவிக்கப்படுகின்றன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.