WEF 2022:தெற்காசியா சுற்றுலாத்துறையில் இந்தியா தொடர்ந்து முதலிடம்: ஆனால்: டாவோஸ் மாநாட்டில் தகவல்

By Pothy RajFirst Published May 24, 2022, 3:40 PM IST
Highlights

WEF 2022 : davos 2022: தெற்காசியாவில் சுற்றுலாத்துறையி்ல்  இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால், உலக சுற்றுலாத்துறையில் கடந்த 2019ம் ஆண்டு 46-வது இடத்தில் இருந்த இந்தியா, 54வது இடத்துக்குச் சரிந்துள்ளது.

தெற்காசியாவில் சுற்றுலாத்துறையி்ல்  இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால், உலக சுற்றுலாத்துறையில் கடந்த 2019ம் ஆண்டு 46-வது இடத்தில் இருந்த இந்தியா, 54வது இடத்துக்குச் சரிந்துள்ளது.

மீட்சி சீராக இல்லை

ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடந்து வருகிறது. இதில் கொரோனாவுக்குப்பிந்த உலக நாடுகளின் சுற்றுலா தரக்குறியீடு விவரங்கள் வெளியிடப்பட்டன.

இதில் பல்வேறு நாடுகளும் கொரோனாவிலிருந்து மீள்வது சீராக இல்லை. சில நாடுகளில் சுற்றுலாத்துறை வேகமாக பெருந்தொற்றிலிருந்து மீண்டு இயல்புநிலைக்கு திரும்பியுள்ளது. ஆனால், பல நாடுகளில் இன்னும் சுற்றுலாத்துறை பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து மீளவில்லை.

தரவரிசை

இதில் 117 நாடுகளின சுற்றுலாக் குறியீட்டில் ஜப்பான் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. 2-வது இடத்தில் அமெரிக்கா, 3-வது இடத்தில் ஸ்பெயின், 4-வது இடத்தில் பிரான்ஸ், 5-வது இடத்தில் ஜெர்மனி நாடுகள் உள்ளன. ஸ்விட்சர்லாந்து 6-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 7-வது இடத்திலும், பிரி்ட்டன் 8-வது இடத்திலும், சிங்கப்பூர் 9வது, இத்தாலி 10-வது இடத்திலும் உள்ளன.

2019ம் ஆண்டு இந்தியா 46-வது இடத்தில் இருந்தநிலையில் 54-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. ஆனால், தெற்காசியாவில் உள்ள சுற்றுலாக் குறியீட்டில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

உலக பொருளாதார மாநாட்டில், போக்குவரத்து மற்றும் சுற்றுலாப் பிரிவின் தலைவர் லாரன் உப்கின் கூறுகையில் “ கொரோனாவில் ஏற்பட்ட ஊரடங்குகள், சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறை உலகெங்கும் மீட்சிஅடைய வேண்டும் என்பதையும், அதன்பங்களிப்பையும் உணர்த்தியுள்ளன.

வளர்ச்சி குறைவு

அடுத்த பலபத்தாண்டுகளுக்கு சுற்றுலாத்துறையும், சேவைத்துறையும் சிறப்பாக இருக்கவும், வலிமையான எதையும் தாங்கும்சூழல் இருக்கும் வகையில் உலக நாடுகள் சுற்றுலாத்துறை மீது அதிக முதலீடு செய்ய வேண்டும். உலகளவில் சுற்றுலாத்துறை மற்றும் அது சார்ந்த வர்த்தகம், கொரோனாவுக்கு முந்தைய காலத்தைவிட பின்தங்கித்தான் இருக்கிறது.

அதிகமான தடுப்பூசித் செலுத்துதல், தடையில்லா சுற்றுலா, உள்நாட்டு மற்றும் இயற்கை சார்ந்த சுற்றுலாக்கு ஏற்பட்ட கிராக்கியால் மீண்டும் சுற்றுலாத்துறை வளரத் தொடங்கியுள்ளது” எனத் தெரிவித்தார்


 

click me!