Volkswagen ID Buzz : ஃபோக்ஸ்வேகன் எலெக்ட்ரிக் வாகன  வெளியீட்டு தேதி அறிவிப்பு

By Nandhini SubramanianFirst Published Jan 25, 2022, 10:43 AM IST
Highlights

ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வேன் மாடலின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.

ஃபோக்ஸ்வேகன் ஐ.டி. புஸ் வேன் சர்வதேச சந்தையில் மார்ச் 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் வாகனம் ஃபோக்ஸ்வேகன்  நிறுவனத்தின் MQB பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கிறது. இது ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் அதிக பிரபலமான, விற்பனையில் அமோக வரவேற்பை பெற்ற மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்ட் ஆகும்.

"எங்களின் அனைத்து எலெக்ட்ரிக் வாகனங்களை விட ஐ.டி. புஸ் எங்களுக்கு மிகவும் நெருக்கமான மாடாக எப்போதும் இருக்கும். எலெக்ட்ரிக் போக்குவரத்து துறையில் எங்களை தலைசிறந்த பிராண்டாக நிலைநிறுத்த இந்த மாடல் மிக முக்கிய  பங்கு வகிக்கும்," என ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரால்ஃப் பிராண்ட்ஸ்டட்டர் தெரிவித்தார்.


 
ஐ.டி. பேட்ஜில் மிகப்பெரிய மாடலாக உருவாகி இருக்கும் ஐ.டி. புஸ் மாடல் ஐ.டி. 3 ஹேட்ச்பேக், ஐ.டி. 4  மற்றும் ஐ.டி. 5 எஸ்.யு.வி.க்கள் பயன்படுத்திய MEB பிளாட்ஃபார்மையே பயன்படுத்தி இருக்கிறது. இது பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு ஏற்ற முதல் மாடலாக இருக்கும்.

இந்த மாடல் கலிஃபோர்னியா கேம்ப்பர் வேன் வடிவிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் ஏற்கனவே 2017 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஜெர்மனியின் ஹனோவர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. மற்ற MEB எலெக்ட்ரிக் வாகனங்களில் உள்ளதை போன்ற பேட்டரிகள் மற்றும் பவர்டிரெயின்கள் இந்த மாடலிலும் வழங்கப்படுகிறது.

இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் விர்டுஸ் செடான் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாடல் மார்ச் மாத வாக்கில் அறிமுகமாகிறது. இது வென்டோ மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய விர்டுஸ் மாடலின் பவர்டிரெயின் மற்றும் அம்சங்கள் ஸ்கோடா ஸ்லேவியா மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது.

click me!