Budget 2022 : National Highway தேசிய நெடுஞ்சாலைகள் விரிவாக்கம் - இத்தனை கிலோமீட்டர்களா ? அசத்தல் அறிவிப்பு

By Kevin KaarkiFirst Published Feb 1, 2022, 12:09 PM IST
Highlights

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் 25 ஆயிரம் கிலோமீட்டர்கள் விரிவாக்கம் செய்யப்படுவதாக பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 

மத்திய பட்ஜெட் 2022 இன்று பாராளுமன்றத்தில் தாக்கல்  செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றினார். பட்ஜெட் அறிவிப்பில் பலதுறை சார்ந்த தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அந்த வரிசையில், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட இருப்பதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார்.

அதன்படி 2022-2023 வாக்கில் நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் 25 ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை நீட்டிக்கப்பட இருக்கின்றன. முன்னதாக நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த தேசிய நெடுஞ்சாலைகளின் முக்கியத்துவம் பற்றி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தனது கருத்துக்களை தெரிவித்து வந்தார். இந்த நிலையில், பட்ஜெட் உரையில் வெளியாகி இருக்கும் அறிவிப்பு காரணமாக விரைவில் இது சாத்தியமாகும் என தெரிகிறது.

பிரதமரின் ஜதி சக்தி வளர்ச்சி திட்டத்தின் கீழ் நான்கு முக்கிய தூண்களில் ஒன்றாக தேசிய நெடுஞ்சாலைகளில் 25 ஆயிரம் கிலோமீட்டர்கள் நீட்டிக்கப்படுவதும் இடம்பெற்று இருக்கிறது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பிரதமரின் ஜதி சக்தி திட்டமானது டிஜிட்டல் முறையில் 16 அமைச்சகங்களை ஒன்றினைத்து கூட்டு திட்டமிடல் மூலம் உள்கட்டமைப்புகள் மேம்படுத்துவது ஆகும்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இந்தியாவில் 2025 வாக்கில் தேசிய நெடுஞ்சாலைகளை 2 லட்சம் கிலோமீட்டர்களாக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது என அமைச்சர் நிதின் கட்கரி ஏற்கனவே அறிவித்து இருந்தார். தற்போது நாடு முழுக்க தேசிய நெடுஞ்சாலைகள் 1.40 லட்சம் கிலோமீட்டர்களாக இருக்கின்றன. 

முன்னதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாடு முழுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய நெடுஞ்சாலை திட்டங்கள் பற்றி பேசினார். அப்போது நாட்டின் நீண்ட நெடுஞ்சாலையான டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வே கட்டுமான பணிகள் விரைவில் நிறைவு பெற்று விடும் என தெரிவித்தார். 

click me!