
ஐதராபாத், செகந்தராபாத் மற்றும் ரச்சகொண்டா போக்குவரத்து காவல் துறை அபராத தொகை செலுத்துவோருக்கு தள்ளுபடி வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. அபராத தொகையில் தள்ளுபடி பெற கிரேட்டர் ஐதராபாத் முனிசிப்பல் கார்ப்பரேஷனில் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
ரூ. 600 கோடி மதிப்பிலான செல்லான்களுக்கு விதிமீறல் செய்தவர்கள் இதுவரை அபராதம் செலுத்தாதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கொரோனாவைரஸ் பாதிப்பு பெருந்தொற்று காரணமாக பொருளாதார சிக்கல் ஏற்பட்டு இருப்பதால், மனித நேய அடிப்படையில் இந்த சலுகை வழங்கப்படுவதாக ஐதராபாத் போக்குவரத்து காவல் துறை தெரிவித்து இருக்கிறது.
புதிய அறிவிப்பின் படி இருசக்கர வாகனங்களில் விதிமீறலில் ஈடுபட்டவர்கள் அபராத தொகையில் 25 சதவீதத்தை மட்டும் செலுத்தினால் போதும். இலகு ரக வாகனங்கள், கார்கள், ஜீப்கள் மற்றும் கனரக வாகனங்கள் 50 சதவீத அபராத தொகையை செலுத்த வேண்டும். சாலை போக்குவரத்து கார்ப்பரேஷன் பேருந்து உரிமையாளர்கள் 30 சதவீத தொகையை செலுத்த வேண்டும். தள்ளுபடி பெற ஆன்லைன் முறையில் அபராதத்தை செலுத்த வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கால நேரத்திற்குள் அபராத தொகையை செலுத்துவோருக்கு இந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஒருமுறை மட்டுமே வழங்கப்படும். இந்த சலுகை மார்ச் 1 ஆம் தேதி துவங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை பொருந்தும். இந்த தேதிகளுக்குள் அபராத தொகையை செலுத்த விதிமீறல் செய்தவர்களுக்கு காவல் துறை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.