
தக்காளி விலை வடமாநிலங்களில் கடுமையாக உயர்ந்து ஒரு கிலோ ரூ.100 எட்டியுள்ளது. இது தவிர காய்கறிகள், எலுமிச்சை ஆகியவற்றின் விலையும் எகிறிவருகிறது.
பணவீக்கம்
பணவீக்கத்தின் உக்கிரத்தை மக்கள் தினசரி அனுபவித்து வருகிறார்கள். வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த முடியாமல் டெல்லியில் பாஜக ஆட்சியையே இழந்திருக்கிறது. ஆதலால், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது எனத் தெரியவில்லை.
இந்திய சமையல்களில் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் இன்றியமையாத பொருளாகஇருக்கிறது. இந்த 3 பொருட்களில் ஏதாவது ஒன்று விலை அதிகரித்தாலும் அதன் தாக்கம் மக்களிடமும் பொருளாதாரத்திலும் மோசமாக இருக்கிறது.
விளைச்சல் பாதிப்பு
அதிலும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நிலவும் வெப்பத்தால் தக்காளி விளைச்சல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சில்லரை விலையில் தக்காளி கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 70 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஜூன் மாதத்தில் தக்காளி கிலோ ரூ.58ஆக இருந்த நிலையில் தற்போது கிலோ ரூ.100க்கும் அதிகமாகச் சென்றுவிட்டது. ஏறக்குறைய 168 சதவீதம் தக்காளி விலை உயர்ந்துவிட்டது என மத்திய உணவுத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
வடமாநிலங்களில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு வரை தக்காளி கிலோ ரூ.60 முதல் 80 வரை விற்பனையான நிலையில், 24 மணிநேரத்தில் கிலோவுக்கு ரூ.40 வரை அதிகரித்து ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.
அதிலும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தக்காளி விலை கிலோ ரூ100 எட்டியுள்ளது. வரத்துக் குறைவு, தட்டுப்பாடு காரணமாக தக்காளி விலை தங்கம் போல் இருக்கிறது.
விலைவாசி உயர்வு
ஏற்கெனவே நாட்டில் சமையல் எண்ணெய் முதல் கோதுமை வரை விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் வரையிலான பணவீக்கம் 7.79 சதவீதமாக இருக்கிறது. சில்லரை விலைப்பணவீக்கமும், மொத்தவிலைப் பணவீக்கமும்கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த விலைவாசி உயர்வு சாமானிய மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அவர்களின் சம்பாத்தியத்தை கடுமையாகப் பாதிக்கிறது.
தக்காளி விலை மட்டுமல்ல காய்கறிகள் விலையும் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் அதிகரி்த்துள்ளது. இனிவரும் நாட்கள் மழைக்காலம் என்பதால் காய்கறிகள் விலையும் , வெங்காயத்தின் விலையும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கணிக்கிறார்கள்.
டெல்லியில் உள்ள மிகப்பெரிய சந்தையான ஆசாத்பூர், காஜிப்பூர் மண்டியில் தக்காளி வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. வழக்கமாக வரும் தக்காளி அளவில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே வருவதால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சில்லரை விலையில் கிலோ தக்காளி ரூ.85 வரை விற்கப்படுகிறது.
எலுமிச்சம் பழம்
டெல்லியில் எலுமிச்சம் பழத்தின் விலை கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரையிலும், கத்தரிக்காய் விலை ரூ.60 முதல் ரூ.80 வரையிலும், காலிபிளவர் விலை ரூ.100 முதல் 120 வரையிலும் விற்கப்படுகிறது. உருளைக்கிழங்கு கிலோ ரூ.40, குடைமிளகாய் கிலோ ரூ.100 முதல் ரூ.130, கேரட் கிலோ ரூ.80 என விற்கப்படுகிறது. இந்த காய்கள் அனைத்தும் கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் விலை அதிகரித்துள்ளது.
அதிகரித்துவரும் தக்காளி விலை, மழைகாலத்தில் வெங்காயத்தின் விலை ஆகியவை மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கு பெரும்சிக்கலை ஏற்படுத்தும். இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நேரத்தில் தக்காளி, வெங்காயத்தின் விலையை உயரவிடாமல் வைத்திருப்பது அவசியம் . இல்லாவிட்டால், தேர்தலில் காய்கறிகள் விலை உயர்வு கடுமையாக எதிரொலிக்கும்.
TOP என்னாச்சு
கடந்த 2018ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி TOP என்ற வார்த்தையை முன்வைத்து பிரச்சாரம் செய்தார். தக்காளி(tomato) வெங்காயம்(onion), உருளைக்கிழங்கு(potato) ஆகியவற்றின் விலையை உயரவிடாமல் வைத்திருப்போம் எனத் தெரிவித்தார். ஆனால் அதிகரித்துவரும் தக்காளி விலையை எவ்வாறு கட்டுப்படுத்தப்போகிறது மத்திய அரசு எனத் தெரியவில்லை.
டெல்லியில் வெங்காய விலை உயர்வால் பாஜக ஆட்சியை இழந்தது நினைவிருக்கும். அதேபோன்ற அதிருப்தி தக்காளி விலை உயர்வால் மக்களுக்கு ஏற்படக்கூடாது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.