
மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களுக்கும் ஆதார் கார்டுதான் அடிப்படைத் தளமாக இருந்து வருகிறது. ஆதார் கார்டு இருப்பதால், மத்திய அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி வீணாவது தடுக்கப்பட்டு இருக்கிறது என்று நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் தெரிவித்தார்
டெல்லியில் நேற்று நடந்த பயிலரங்கு ஒன்றில் “ ஆதார் பயன்பாட்டை எளிமையாக்கிய சமீபத்திய முன்னெடுப்புகள்” என்ற தலைப்பில் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் பேசினார். அவர் பேசியதாவது:
மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு அடித்தளமாக இருந்து வருவது ஆதார் கார்டுதான். பயனாளிகளுக்கு விரைவாக பலன்களை வழங்கவும், எந்தவிதமான இடைத் தரகர்கள் யாருமின்றி பலன்கள் கிடைக்கவும், பணம் வீணாவதைத் தடுக்கவும் ஆதார் கார்டு அதிகம் பயன்படுகிறது.
உலகிலேயே பயோ-மெட்ரிக் மூலம் அடையாளப்படுத்தும் திட்டங்களில் ஆதார் வெற்றிகரமானத் திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி உலகில் உள்ள உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை விவாதித்துள்ளன. ஆதார் செயல்பாட்டைப் பார்த்து வியந்த பிறநாடுகள் அதேபோன்று தங்கள் நாட்டிலும் செயல்படுத்தியுள்ளன.
மத்திய அரசின் 315 திட்டங்கள், மாநில அரசுகளின் 500 திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுவதற்கு ஆதார் கார்டு பயன்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பயனாளிகளுக்கு உரிய பலன் விரைவாகவும், சரியாகவும் கிடைக்க ஆதார் பயன்படுகிறது.
மத்திய அரசின் அனைத்துவிதமான திட்டங்களுக்கும் அடிப்படையாக அமைவது ஆதார் திட்டம்தான். இடைத்தரகர்கள் யாருமின்றி திட்டத்தை செயல்படுத்துவதால், அரசுக்கு ரூ.2.22 லட்சம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டு பயன்பாட்டுக்கு வந்ததன் மூலம் போலி அடையாள அட்டைகள், பொய்யான கார்டுகள் அடையாளம் கண்டு அழிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அமிதாப் காந்த் தெரிவித்தார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.