உங்கள் மகள்களை லட்சாதிபதியாக்கும் திட்டம் பற்றிய முழு விவரத்தையும் தெரிந்து கொண்டு உடனே அதில் சிறுக சிறுக சேமித்து பலனடையுங்கள்
பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி பெற்றோருக்கு எப்போதும் கவலை இருக்கும். அதற்காக சிறிது சிறிதாக பெற்றோர் சேமித்து வருவர். ஆனால், அவற்றை சரியான திட்டத்தில் சேமிக்க வேண்டும். அப்போதுதான் சிறந்த ரிட்டன்ஸ் கிடைத்து பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு உதவும்.
அந்த வகையில், சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக இந்திய அஞ்சல் துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் அவர்களது பெற்றோரோ அல்லது பாதுகாவலரோ தபால் நிலையங்களில் இந்த கணக்கை தொடங்கலாம். இந்த கணக்கின் கீழ் செலுத்தும் தொகைக்கு வரிவிலக்கும் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்காக இரண்டு கணக்குகளை நீங்கள் துவங்க முடியும்.
undefined
சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் ஆண்டுக்கு 8 சதவீத வட்டி வழங்கப்படுகிறது என்பதால், மிகவும் சிறந்த திட்டமாக இது பார்க்கப்படுகிறது. செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு திறக்கும் போது முதல் கட்டமாக ரூ.250 செலுத்தினால் போதும். வருடந்தோறும் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் செலுத்த வேண்டும். அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை செலுத்தலாம்.
கணக்கு தொடங்கியதிலிருந்து 15 ஆண்டுகள் வரை சேமிப்புத் தொகையை செலுத்தினால் போதும். டெபாசிட் தொகை 21 ஆண்டுகளில் முதிர்ச்சி அடையும். அந்த சமயத்தில் நீங்கள் செலுத்திய தொகையில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மடங்கு தொகை உங்களுக்கும் அதிகமாக கிடைக்கும்.
செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் கணக்கு தொடங்க, பெண் குழந்தைகளின் பிறப்பு சான்றுதழை சமர்ப்பிக்க வேண்டும். பிறப்புச் சான்றிதழ் இல்லாத பட்சத்தில் ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றை வயது சான்று ஆவணமாக விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து வழங்கலாம். அதனுடன் சேர்த்து பெற்றோரின் ஆதார் அட்டை நகலைக் காண்பித்து கணக்கை எளிதாகத் தொடங்க முடியும்.