மேசன் வால்வ்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு பட்டியலிடப்பட்ட விலையைவிட 90 சதவீதம் உயர்ந்து முதலீட்டார்களை உற்சாகம் அடைய வைத்துள்ளது.
மேசன் வால்வ்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மதிப்பு இன்று (செப்டம்பர் 21ஆம் தேதி) பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட விலையைவிட 90 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், இந்த நிறுவனத்தில் பங்குகளை வாங்கியவர்களின் முதலீடுகள் ஒரே நாளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் தொடக்கத்தில் பங்கு வெளியீட்டு விலை ரூ.102க்கு ஆக இருந்த நிலையில், ரூ.193.80 ஆக உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. காலை 10:45 மணிக்கு, மேசன் வால்வ்ஸ் விலை 99.4 சதவீதம் உயர்ந்து ரூ.203.45க்குச் சென்றது.
நிறுவனத்தின் 30.48 லட்சம் ஈக்விட்டி பங்குகளில் ஆரம்பப் பங்குகள் புதிய வெளியீட்டை மட்டுமே உள்ளடக்கியவை. இதில் 1.59 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.56 லட்சம் பங்குகள் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுவிட்டன. இது சில்லறை விற்பனை பிரிவில் 203.02 மடங்கும், இதர பிரிவில் 132.74 மடங்கும் சந்தா செலுத்தப்பட்டது.
மேசன் வால்வ்ஸ் இந்தியா நிறுவனம் கடற்படை, எண்ணெய் மற்றும் எரிவாயு தொழிற்சாலைகள், மின் நிலையங்கள் ஆகியவற்றிற்குத் தேவையான வால்வுகள், ஆக்சுவேட்டர்கள், ஸ்ட்ரைனர்கள் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வால்வு அமைப்புகளை வழங்குகிறது. உள்நாட்டில் மட்டுமின்றி சர்வதேச அளவில் இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
புனேவைச் சேர்ந்த மேசன் வால்வ்ஸ் நிறுவனம், புதிய வெளியீட்டுத் தொகையில் ரூ.11.37 கோடியை இயந்திரங்களை வாங்குவதற்கும், ரூ.11.95 கோடியை செயல்பாட்டு மூலதனத் தேவைகளுக்கும் பயன்படுத்த உள்ளது. மீதமுள்ள நிதி இதர செலவுகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.
2023 நிதி ஆண்டில், மேசன் வால்வ்ஸ் நிறுவனத்தின் வருவாய் முந்தைய நிதியாண்டின் ரூ.14.31 கோடியில் இருந்து ரூ.37 கோடிக்கு இருமடங்கு வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. நிகர லாபமும் ஓராண்டில் 113 சதவீதம் அதிகரித்து ரூ.2.12 கோடியாக உள்ளது.