sri lanka crisis : தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறப்பதையடுத்து பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 11ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா அனுப்பியது. இந்த அரிசி நேற்று இலங்கை சென்று சேர்ந்தது
தமிழ், சிங்களப் புத்தாண்டு பிறப்பதையடுத்து பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 11ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா அனுப்பியது. இந்த அரிசி நேற்று இலங்கை சென்று சேர்ந்தது
புத்தாண்டு கொண்டாட்டம்
இலங்கையில் சிங்களப் புத்தாண்டு இன்று பிறந்துள்ளது, தமிழர்கள் வாழும் வடகிழக்கு மாகாணங்களில் தமிழ்புத்தாண்டு(சித்திரை-1) ஏப்ரல் 14ம் தேதி பிறக்கிறது. இலங்கையில் சிங்கள மக்களும், தமிழர்களும் தங்களின் புத்தாண்டை மிகச்சிறப்பாகக் கொண்டாடுவது வழக்கம்.
புத்தாண்டு தினத்துக்கு முன்பாக இலங்கையில் அரிசி சென்று சேர வேண்டும் என்பதற்காக இந்தியாவிலிருந்து 11 ஆயிரம் மெட்ரிக்டன் அரிசி கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டு நேற்று கொழும்பு துறைமுகம் சென்று சேர்ந்தது.
விலைவாசி உயர்வு
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதாரச் சிக்கலால் அரிசி, கோதுமையின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால்தான் இந்த விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு கூடஇலங்கை அரசிடம் அன்னியச் செலவாணி கையிருப்பு இல்லை.
கடனுதவி
இதனால் இந்தியாவி்டம் நிதியுதவி கோரியதைத் தொடர்ந்து, ஏற்கெனவே 100 கோடி டாலர்கள் நிதியுதவி வழங்கியிருந்தது தவிர்த்து 100 கோடி டாலருக்கு தேவையான மருந்துகள், உணவுப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள், டீசல், பெட்ரோல் ஆகியவை அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலிருந்து ஏற்கெனவே டீசல் கப்பலில் அனுப்பப்பட்டு வருகிறது. இது தவிர உணவுப் பொருட்களும் அனுப்பப்பட்டு வருகின்றன.
அரிசி அனுப்பிய இந்தியா
அந்தவகையில் இலங்கையில் சிங்களப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு பிறப்புக்கு முன்பாகஅரிசியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில், “ இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றிக்கொண்டு வந்த கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.
இலங்கை மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு முன்பாக அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்திலிரந்து 16ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு இந்த கடினமான நேரத்தில் இந்தியா செய்யும் உதவி இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளது
கடனை திருப்பித் தர இயலாது
இலங்கை அரசுக்கு வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு வங்கிகளில் மட்டும் 5100 கோடி டாலர் கடன் இருக்கிறது. ஆனால், தற்போதுள்ள நிலையில் இலங்கை அரசிடம் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைவாக இருக்கிறது, உணவுப் பொருட்களை வாங்க மட்டுமே பயன்படுத்த உள்ளது.
இதையடுத்து இலங்கை அரசு நேற்று விடுத்த அறிவிப்பில், “ தற்போதுள்ள சூழலில் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறோம். சூழல் இயல்புநிலைக்கு திரும்பியபின் கடனை வழங்குகிறோம். கடனுக்கான வட்டியை இலங்கை ரூபாயில் பெற்றுக்கொள்ளலாம்” என நேற்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.