share market today: வாரத்தின் கடைசி வர்த்தகநாளான இன்று மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தை பெரும் வீழ்ச்சியுடன் முடிந்தன. முதலீட்டாளர்களுக்கு ரூ.3.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
2022ம் ஆண்டு பிறந்து 5 மாதங்கள் முடிந்தும் இன்னும் பங்குச்சந்தை பெரும் ஊசலாட்டத்துடனே இருந்து வருகிறது. பங்குச்சந்தை நேற்று சாதகமாக முடிந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து சரிவுடன் காணப்பட்டது.
சரிவுக்கு காரணம் என்ன?
சர்வதேச அளவில் கமாடிட்டி விலையில் நிலையற்ற சூழல், ரஷ்யா உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை உயர்வு, சப்ளை பாதிப்பு, சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா போன்றவை முதலீட்டாளர்களை அச்சமடையச் செய்தன.
அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து உய்ர்ந்த நிலையில் இருப்பதால் பெடரல் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால் அமெரிக்க கடன் பத்திரங்களில் முதலீடு அதிகரித்து வருகிறது. பெடரல் வங்கி மேலும் 50 புள்ளிகளை உயர்த்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்களை எச்சரிக்கையுடன் இருக்கச் செய்தது. ஆசிய பங்குச்சந்தையும் இன்று சரிவுடன் முடிந்தது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குலைப்பதாக இருந்தது.
சீனாவின் ஷாங்காய் நகரில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து லாக்டவுன் விதித்திருப்பது, இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவது, குறிப்பாக மகாராஷ்டிராவில் பாதிப்பு அதிகரிப்பது முதலீட்டாளர்களை கவலையில் ஆழ்த்தியது.
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து பேரல் 120 டாலருக்கு மேல் அதிகரிப்பது, டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்புக் குறைந்து வருவது போன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யவில்லை.
ரூ.3.20 லட்சம் கோடி
மும்பை பங்குச்சந்தையில் இன்று வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 1017 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 54,303 புள்ளிகளில் முடிந்தது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 276 புள்ளிகள் குறைந்து, 16,201 புள்ளிகளில்முடிந்தது. முதலீட்டாளர்களுக்கு இன்று மட்டும் ரூ.3.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
சரிவு
30 முக்கியப் பங்குகளைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 7 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன. ஏசியன்பெயின்ட்ஸ், அல்ட்ராசிமெண்ட், டாக்டர் ரெட்டீஸ், டைட்டன், இன்டஸ்இன்ட் வங்கி, நெஸ்ட்லே இந்தியா, இந்துஸ்தான்யூனிலீவர் ஆகிய பங்குகள் மட்டுமே லாபத்தில் முடிந்தன.
நிப்டியில், பஜாஜ் பைனான்ஸ், ஹெச்டிஎப்சி, கோடக் வங்கி, ஹின்டால்கோ, விப்ரோ, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டெக்மகிந்திரா, இன்போசிஸ் பங்குகள் 2.5 சதவீதம் முதல் 4 சதவீதம் வரை சரிந்தன. கிராஸிம் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, டாக்டர் ரெட்டீஸ் நிறுவனம் ஓரளவுக்கு லாபமடைந்தன. நிப்டியில் தகவல்தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, தனியார் வங்கி, நிதிச் சேவை ஆகிய துறைகள் 2 சதவீதம் சரிந்தன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.