
மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சர்வதேச பங்குச்சந்தையில் ஏற்றம், இறக்கம் நிலவியபோதிலும் அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு, தேசிய, மும்பைப் பங்குச்சந்தைகள் இன்று காலை உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கின.
பெடரல் வங்கி
அமெரிக்காவில் அதிகரித்துவரும் பணவீக்கத்தால் வட்டி வீதத்தை உயர்த்த பெடரல் வங்கி முடிவு செய்துள்ளது. இது மே மாதத்திலிருந்தே நடைமுறைக்கு வரலாம் எனத் தெரிகிறது. சீனாவில் கொரோனா பாதிப்பு இருந்தபோதிலும், ஷாங்காய் நகரில் தொற்று குறைந்து வருவதும், மீண்டும் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியிருப்பதும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி
இந்த வாரத்தில் இந்திய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வெளியாவதை முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் எிதர்பார்த்துள்ளனர். ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்தபோதிலும், இரு நாடுகளின் போரால் உலகளவில் பொருளாதார வளர்ச்சி குறையும் என சர்வதேச நிதியம் தெரிவத்திருந்தாலும் அதை முதலீட்டாளர்கள் பொருட்டாகக் கருதவில்லை.
சாதகமான அம்சங்களை மட்டும் எடுத்துக்கொண்டு காலையில் லாபமீட்டும் நோக்கில் அணுகியதால் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பைப் பங்குச்சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கியதும், சென்செக்ஸ் 518 புள்ளிகள் ஏற்றத்துடன் 56,981 புள்ளிகளில் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
ஏற்றத்துடன் வர்த்தகம்
தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் 156 புள்ளிகள் உயர்ந்து, 17,115 புள்ளிகளில் வர்த்தகம் நடந்து வருகிறது.
30நிறுவனங்களைக் கொண்ட மும்பைப் பங்குச்சந்தையில் 10 நிறுவனப் பங்குகள் மட்டுமே சரிவில் உள்ளன மீதமுள்ள 20 பங்குகள் ஏற்றத்தில் செல்கின்றன. பஜாஜ் பைனான்ஸ், ஹெச்சிஎல்டெக், சன்பார்மா, டாடாஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, பவர்கிரிட், இந்துஸ்தான் யுனிலீவர், கோடக் வங்கி ஆகியவை சரிவில் உள்ளன
மாருதி, ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, விப்ரோ, மகிந்திரா அன்ட் மகிந்திரா, இன்போசிஸ், அல்ட்ராடெஸ் சிமெண்ட் ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்தோடு நகர்கின்றன.
நிப்டி
நிப்டியில் எய்சர் மோட்டார்ஸ், கோல் இந்தியா, டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே ஆகிய நிறுவனப்பங்குகள் லாபத்தில் செல்கின்றன. கோடக் வங்கி, இன்டஸ்இன்ட் வங்கி, ஹெச்டிஎல் டெக், பஜாஜ் பைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், அப்பலோ மருத்துவமனை, ஹெட்சிஎப்சி லைப், ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனப் பங்குகள் சரிவில் உள்ளன
நிப்டியில் ஆட்டமொபைல், எப்எம்சிஜி, ஊடகம், ரியல்எஸ்டேட், தகவல்தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய துறைப் பங்குகள் ஒரு சதவீதம் உயர்வுடன் செல்கின்றன. வங்கித்துறை, நிதிச்சேவை பங்குகள் சரிவில் உள்ளன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.