
மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் கடந்த 4 நாட்களுக்குப்பின் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. சர்வதேச காரணிகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தபோதிலும் உயர்வுடன் வர்த்தகம் தொடங்கியது முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் அளித்துள்ளது.
ஏற்றத்திதல் அமெரிக்கச் சந்தை
அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று உயர்வுடன் முடிந்தது உலக சந்தையில் சாதகமான போக்கு நிலவ முக்கியக் காரணம். இருப்பினும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பெடரல் வங்கி வட்டியை உயர்த்துவதை தீவிரப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியச் சந்தைகளில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
அமெரிக்கச் சந்தையிலும் வட்டிவீத உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றால் சரிந்து வந்த வர்த்தகம் நேற்று ஓரளவுக்கு உயர்ந்துள்ளது. இருப்பினும் வட்டிவீதம் அதிகரிப்பால், உலகளவில் பொருளாதாரச் சரிவு ஏற்படுவதற்கான சாத்தியங்கள் இருப்பதையும் காட்டுகின்றன.
ரெப்போ ரேட்
இந்தியாவிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தியது சந்தையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதிலிருந்து மெல்ல மீண்டாலும், ஏப்ரல் மாத பணவீக்கம் 7 சதவீதத்தை கடக்கும் என்ற செய்தியால், மீண்டும் வட்டிவீதம் உயர்த்தப்படும் சாத்தியங்கள் உள்ளதைக் காட்டுகிறது. இது தவிர உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், சர்வதேச சூழல் ஆகியவற்றால் கடந்த சில நாட்களாக பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவுடன் காணப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்று வருவதும், டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்ததும் சந்தையில் பெரும்அழுத்தத்தை ஏற்படுத்தி சரிவுக்கு இட்டுச் சென்றது. ஆனால் அதிலிருந்து இன்று பங்குச்சந்தை மீளத் தொடங்கியிருக்கிறது.
உயர்வுடன் தொடக்கம்
ஆனால், சந்தையில் கடும் ஏற்ற இறக்கம் நிலவுவதால், பிற்பகலில் எவ்வாறு மாற்றம் நிகழும் எனத் தெரியவில்லை. காலை வர்த்தகத்தில், மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 137 புள்ளிகள் உயர்ந்து, 54,502 புள்ளிகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 51 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 16,291 புள்ளிகளில் உயர்வுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
உலோகம் வங்கி பங்கு லாபம்
30 முக்கியப் பங்குகளைக் கொண்டமும்பைப் பங்குச்சந்தையில் 11 நிறுவனப் பங்குகள் சரிவிலும், 19 நிறுவனப் பங்குகள் லாபத்திலும் உள்ளன. குறிப்பாக ஹெச்டிஎப்சி, டாடா ஸ்டீல், டெக் மகிந்திரா, பஜாஜ் பின்சர்வ், ஐசிஐசிஐ வங்கி, பவர்கிரிட், பார்திஏர்டெல், மகிந்திரா அன்ட் மகிந்திரா ஆகிய நிறுவனப் பங்குகள் லாபத்தில் 2 சதவீத உயர்வில் உள்ளன. யுபிஎல், ஹெச்டிஎப்சி லைப், அதானி போர்ட்ஸ், ஓஎன்ஜிசி ஆகிய பங்குகளும் ஏற்றத்துடன் நகர்கின்றன
அதேசமயம், ஏசியன்பெயின்ட்ஸ், ஹெச்யுஎல், இன்போசிஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், லார்சன் அன்ட் டூப்ரோ, இன்டஸ்இன்ட் வங்கி, சிப்லா,பிரிட்டானா நிறுவனப் பங்குள் சரிவில் உள்ளன. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டியில் உலோகம், வங்கி, நிதிச்சேவை, ரியல்எஸ்டேட், மின்சக்தி ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்துடன் நகர்கின்றன. தகவல் தொழில்நுட்பம், எப்எம்சிஜி, மருந்துத்துறை பங்குகள் சரிவில் உள்ளன.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.