
மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக இன்று சரிவுடன் வர்த்தகத்தை முடித்தன. சர்வதேச சூழலால் கலக்கமடைந்த முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யவில்லை.
தீவிரமடையும் போர்
உக்ரைன், ரஷ்யா இடையிலான போர் நாளுக்கு நாள் தீவிரமடைவது, முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன. இதனால், ரஷ்யா மீது பொருளாதாரத் தடை மேலும் வலுப்பெறக்கூடும். அதனால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரலாம் என்று எண்ணுகிறார்கள்.
தடை
அதற்கு ஏற்றார்போல், ஐரோப்பிய யூனியன் இன்றும், நாளையும் கூடி ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கும் உத்தரவைப் பிறப்பிப்பது குறித்து ஆலோசிக்க இருக்கிறது. இதனால் சந்தையில் முதலீட்டாளர்கள் உலகச் சூழலை கூர்ந்து உற்றுநோக்கி வருகிறார்கள்.
விலை அதிகரிப்பு
கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தநிலையில் கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. இதையும் முதலீட்டாளர்கள் கவனித்து வருகிறார்கள். அமெரிக்கப் பங்குச்சந்தை, ஆசியப்பங்குச்சந்தையிலும் மந்தமானப் போக்கும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையைத் தரவில்லை. இதனால் காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்து முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்யவரவில்லை.
அமெரிக்க பெடரல் வங்கி பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த 50புள்ளிகள்வரை உயர்த்துவோம் எனத் தெரிவித்திருப்பதும் முதலீட்டாளர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
சரிவுடன் தொடக்கம்
இதனால், மும்பைப் பங்குச்சந்தையில் காலையில் சென்செக்ஸ் 400 புள்ளிகளும் தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 117 புள்ளிகள் குறைந்தன. ஆனால் பிற்பகலுக்குப்பின் சரிவிலிருந்து மீளத்தொடங்கின.
மருந்துத்துறை பங்குகள், தகவல்தொழில்நுட்பம், எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம் ஆகிய துறைகளின் பங்குகள் ஓரளவுக்கு லாபம் கொடுக்கவே முதலீட்டாளர்கள் அதில் கவனம் செலுத்தினர்.
லேசான சரிவு
மும்பைப் பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தகம் முடிவில், சென்செக்ஸ், 173 புள்ளிகள் சரிந்து, 57,511 புள்ளிகளில் முடிந்தது. காலையில் 500 புள்ளிகள் வரை சரிந்த நிலையில் ஏறக்குறைய 400 புள்ளிகள் மீண்டது.
தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 22 புள்ளிகள் வீழ்ந்து, 17,222 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே 17,091 புள்ளிகள்வரை குறைந்தது குறிப்பிடத்தக்கது.
பாதிக்குப் பாதி
மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் 15 பங்குகள் லாபத்தையும், 15 பங்குகள் சரிவிலும் முடிந்தன. அதிகபட்சமாக டாக்டர் ரெட்டீஸ்5 சதவீதமும், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் ஒருசதவீதமும் லாபமீட்டின. இது தவிரஅல்ட்டரா டெக் சிமெண்ட், டிசிஎஸ், டெக் மகிந்திரா, டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ், ஹெச்சிஎல், , விப்ரோ, என்டிபிசி, இன்போசிஸ், பவர்கிரிட், பார்தி ஏர்டெல் பங்குகள் லாபத்தில் முடிந்தன
நிப்டியில் ஊடகம், தகவல்தொழில்நுட்பம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, மருந்துத்துறை ஆகிய துறைகளின் பங்குகள் லாபத்தில் வர்த்கத்தை முடித்தன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.