
சமையல் கேஸ் சிலிண்டர் விலையை கடந்த 2 ஆண்டுகளில் 37 சதவீதம்தான் உயர்த்தியிருக்கிறோம். சர்வதேச அளவில் விலைநிலவரத்தை பார்த்துவிட்டு பேசுங்கள் என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்.
சர்வதேச சந்தை விலை
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர்ந்து 4 மாதங்கள் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 4 மாதங்களுக்குப்பின் கடந்த இரு நாட்களாக லிட்டருக்கு 80 பைசா உயர்த்தப்பட்டது. அதேபோல சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் ரூ.50உயர்த்தப்பட்டது.
எதிர்க்கட்சிகள்
சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இன்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது மத்திய பெட்ரோலியத் துறைஅமைச்சர் ஹர்தீப் சிங் பூரி எரிபொருள் விலை உயர்வு குறித்து விளக்கிப் பேசியதாவது:
5 சதவீதம் விலை உயர்வு
சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை கடந்த 2021 ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில் 2022 பிப்ரவரி காலகட்டத்தில் விலை 37 சதவீதம் அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் , கொரோனா பரவல் காரணமாக இன்னும் சந்தையில் நிலையான விலை வைக்க முடியவில்லை. ஆனால், வெறும் 5 சதவீதம் மட்டுமே நாம் விலையை உயர்த்தியிருக்கிறது.
37% உயர்வு
சமையல் கேஸ் சிலிண்டர் விலை சர்வதேச சந்தையில் கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து 2022 மார்ச் மாதம் வரை 285 சதவீதம் விலை அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 6 மாதங்களில் நாம் வெறும் 37 சதவீதம் மட்டுமே விலையை உயர்த்தியிருக்கிறோம்.
இந்தஅவையில் இருக்கும் உறுப்பினர்கள், எரிபொருள் விலை பற்றி பேசும் போது சர்வதேச சந்தையில் நிலவும் விலை குறித்தும், உண்மை நிலை குறித்தும் ஆலோசித்துப் பேசுங்கள். சர்வதேச அளவில் இன்றைய சூழல் என்ன என்பதையும்புரிந்து கொள்ளுங்கள்
நடவடிக்கை
சர்வதேச அளவில் எரிபொருள் விலை உயர்ந்தாலும் நம்நாட்டு மக்களை பாதிக்காத வகையில் விலை உயராமல் வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது.சிஎன்ஜி எரிவாயுவை மக்கள் எளிதாக வாங்கக்கூடிய விலையில்தான் மத்திய அரசு வைத்திருக்கிறது.
இவ்வாறு ஹர்திப் சிங் பூரி தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.