
பதஞ்சலி நிறுவனத்தின் ருச்சி சோயா நிறுவனம் ஏப்ரல் மாதத்துக்குள் கடன் இல்லாத நிலைக்கு வரும் என்று யோகா குரு பாபா ராம் தேவ் நம்பிக்கைத் தெரிவித்தார்.
ருச்சி சோயா
ருச்சி சோயா நிறுவனத்துக்கு தற்போது ரூ.3300 கோடி கடன் இருக்கிறது. இந்த கடன் அனைத்தையும் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் அடைக்க முடியும் என்று பதஞ்சலி நிறுவனம் நம்புகிறது.
ஹரித்துவாரைச் சேர்ந்த பதஞ்சலி நிறுவனம் கடந்த 2019ம் ஆண்டு நாக்பூரைச் சேர்ந்த ருச்சி சோயா நிறுவனத்தை ரூ.4,350 கோடிக்கு வாங்கியது. நாள்தோறும் அந்த நிறுவனம் ஒரு கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலையில்தான் இருக்கிறது.
பங்கு வெளியீடு
இந்நிலையில் ருச்சி சோயா நிறுவனத்தின் பங்குகளை சந்தையில் வெளியிட்டு முதலீடு திரட்ட பதஞ்சலி நிறுவனம் முடிவு செய்தது. இதன் மூலம் ரூ.4300 கோடி திரட்டவும் முடிவு செய்துள்ளது.
ருச்சி சோயா நிறுவனத்தில் ஏற்கெனவே ரூ.1,290 கோடிக்கு கோடக், யுடிஐ, ஆதித்யா பிர்லா சன்லைப் நிறுவனங்கள் முதலீடு செய்துவிட்டன. மீதமுள்ள தொகைக்கு பங்குகளை வெளியிட இருக்கிறது பதஞ்சலி நிறுவனம். இதில் 35 சதவீதப் பங்குகளை சில்லரை முதலீட்டாளர்களுக்கும், 15 சதவீதம் அதிக முதலீடு வைத்திருக்கும் தனிநபர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும். ருச்சி சோயா நிறுவனத்தின் சார்பில் பங்கு வெளியீடு சந்தையில் இன்று தொடங்கியுள்ளது.
ஏப்ரலில்கடன் இருக்காது
இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் சார்பில் யோகா குரு பாபா ராம் தேவ் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:
பதஞ்சலிநிறுவனம் ருச்சி சோயா நிறுவனத்தை வாங்கி, பங்குகளை சந்தையில் வெளயிட்டுள்ளது. அந்த நிறுவனத்துக்கு இருக்கும் கடன் இனிமேல் இருக்காது. வரும் ஏப்ரல் மாதத்துக்குள் ருச்சி சோயா நிறுவனம் கடன் இல்லாத நிறுவனமாக மாறும்.பதஞ்சலி நிறுவனம் தனது ஆயுர்வேத பொருட்கள், மருந்துகளை திவ்லா ஃபார்மஸி மூலம் விற்பனை செய்ய இருக்கிறது.
புதிய இடத்தைப் பிடிக்கும்
போட்டியாளர்களைச்சமாளிக்கவும், திறன்பட செயலாற்றவும், பதஞ்சலி நிறுவனத்தின் உணவுப்பொருட்கள் அனைத்தும் ருச்சி சோயா நிறுவனத்தின் கீழ் வரும். உணவு இல்லாத பொருட்கள், ஆயுர்வேத மருந்துகள், உடல்நலன் சார்ந்த பொருட்கள், வியாபாரம் ஆகியவை பதஞ்சலி நிறுவனத்தின் கீழ் வரும். இரு நிறுவனங்களின் வர்த்தகமும் ஒன்றோடு ஒன்று கலக்காது. அடுத்த சில ஆண்டுகளில் நுகர்வோர் பொருட்கள்விற்பனையில் புதிய பங்களிப்பையும் மிகப்பெரிய இடத்தையும் ருச்சி சோயா பிடிக்கும்.
இவ்வாறு யோகா குரு ராம் தேவ் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.