சென்செக்ஸ் இன்று 509 புள்ளிகள் அதிகரித்து 60,468 புள்ளிகளாக தற்போது வர்த்தகமாகி வருகிறது. நிப்டி 152 புள்ளிகள் அதிகரித்து 17,938 புள்ளிகளாக உள்ளது. உலக வர்த்தகம் சாதகமாக இருப்பதால் வர்த்தக துவக்கமே இன்று ஏற்றத்துடன் காணப்படுகிறது.
காலை 9.17 மணியளவில், பிஎஸ்இ சென்செக்ஸ் 509 புள்ளிகள் அதாவது 0.85 சதவீதம் உயர்ந்து 60,468 ஆக வர்த்தகமானது. பின்னர் சிறிது நேரத்தில் 606 புள்ளிகளாக உயர்ந்து காணப்பட்டது. நிப்டி 50 எனப்படும் தேசிய பங்குச் சந்தை 152 புள்ளிகள் அதாவது 0.85 சதவீதம் உயர்ந்து 17,938 ஆக வர்த்தகமானது.
இன்றைய வர்த்தகத்தில் எல்ஐசி பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகள் 2.5 சதவீதம் உயர்ந்து காணப்பட்டது. பங்குதாரர்களுக்கு டிவிடன்ட் அல்லது போனஸ் பங்குகள் கொடுப்பதாற்கு எல்ஐசி திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டதை அடுத்து பங்குகளின் விலை அதிகரித்துள்ளது. பாலிசிதாரர்களின் நிதியில் இருந்து சுமார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு டிவிடன்ட் அல்லது போனஸ் பங்குகள் வழங்குவதற்கு திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஹீரோமோட்டார் கம்பெனி நடப்பு 2022ஆம் நிதியாண்டில் 20% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நடந்து முடிந்த விழாக் காலங்களில் இந்த நிறுவனம் வாகன விற்பனையில் நல்ல நேர்மறையான வர்த்தகத்தை சந்தித்துள்ளது. இன்று மட்டும் இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு ரூ. 40.15 அதிகரித்து 2,690.00 ரூபாயாக காணப்பட்டது.
தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை திடீர் உயர்வு.. இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்..
பங்குச் சந்தை ஒரு பக்கம் உயர்ந்து, அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 82.39 ஆக சற்று உயர்ந்து காணப்படுகிறது. இது இதற்கு முன்பு நாளில் 82.47 ஆக சரிந்து இருந்தது. பத்தாவது மாதமாக தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து காணப்படுகிறது.
ஆல்செக் டெக்னாலஜிஸ், டாடா பவர், பனாஜி டிஜிலைப் லிமிடெட், எல் அண்டு டி ஆகியவற்றின் பங்குகளின் மதிப்பு இன்று உயர்ந்து காணப்பட்டது. பொதுவாக இன்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள், ஐடி நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்பட்டது. எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு குறைந்து காணப்பட்டது.
எரிபொருள் விலை குறைந்து காணப்படுகிறது. சீனாவில் இன்னும் கொரோனா கட்டுக்குள் வரவில்லை. இதனால் எரிபொருளுக்கான தேவையும் குறைந்துள்ளது. உலகிலேயே மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவுக்கு எரிபொருள் விலை குறைந்து இருப்பது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவற்கு உதவியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.