
சர்வதேச காரணிகள், சீனாவில் நிலவும் லாக்டவுன், அமெரிக்க பெடரல் வங்கியின் நடவடிக்கை ஆகியவற்றால் மும்பை மற்றும் தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 2-வது நாளாக சரிவுடன் தொடங்கியது.
சீன லாக்டவுன்
அமெரிக்காவில் மார்ச் மாதத்துக்கான பணவீக்க விவரங்கள் வெளியாக உள்ளன. இதில் பணவீக்கம் அதிகரிக்கும் பட்சத்தில் பெடரல் வங்கிவட்டி வீதத்தை உயர்த்தும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவுகிறது.
மேலும், சீனாவில் கொரோனா பரவல் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. அங்கு லாக்டவுன் நடவடிக்கை பல்வேறு நகரங்களில் தொடர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீண்டும் கொரோனா பரவல் உலகளவில் வரக்கூடுமோ என அஞ்சுகிறார்கள்.
விலை குறைகிறது
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென குறையத் தொடங்கியுள்ளது. பிரன்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 4 டாலர் சரிந்து 100 டாலருக்கும் குறைந்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தையான நாஷ்டாக் சரிவுடன் முடிந்ததையடுத்து, அதன் எதிரொலி ஆசியப் பங்குச்சந்தையிலும் பிரதிபலித்து வருகிறது. ஆசியப்பங்குச்சந்தையிலும் முதலீட்டாளர்கள் ஆர்வத்துடன் முதலீடு செய்ய முன்வரவில்லை. குறிப்பாக ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் அடுத்துவரும் நாட்களில் தீவிரமடையலாம் என்று கூறப்படுவதும் முதலீட்டாளர்கள் உற்று நோக்கி வருகிறார்கள்.
2-வது நாளாகச் சரிவு
இதனால் இந்தியப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் முதலீட்டை கையாண்டு வருகிறார்கள். காலை வர்த்தகம் தொடங்கியவுடன் மும்பைப் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 419 புள்ளிகள் குறைந்து, 58,545 புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கி நடத்தி வருகிறது. தேசியப்பங்குச்சந்தையில் நிப்டி 123 புள்ளிகள் சரிந்து, 17,552 புள்ளிகள் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
டிசிஎஸ்க்கு அடி
30 முக்கிய பங்குகளைக் கொண்ட மும்பை பங்குச்சந்தையில், 8 நிறுவனப் பங்குகள் மட்டுமே லாபத்தில் செல்கின்றன, மற்ற பங்குகள் சரிவில் உள்ளன. குறிப்பாக பார்திஏர்டெல், அல்ட்ராடெக் சிமெண்ட், இன்டஸ்இன்ட் வங்கி, விப்ரோ, மாருதி, லார்சன் அன்ட் டூப்ரோ, பஜாஜ் பைனான்ஸ் ஆகிய பங்குகள் லாபத்தில் செல்கின்றன. டிசிஎஸ் நிறுவனப் பங்குகள் காலையிலிருந்து ஒரு சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மருந்துத்துறை லாபம்
நிப்டியில் ஊடகத்துறை, மருந்துத்துறை பங்குகள் மட்டுமே லாபத்தில் செல்கின்றன. மற்ற துறைகளான ஆட்டமொபைல், எப்எம்சிஜி, நிதிச்சேவை, தகவல்தொழில்நுட்பம், உலோகம், பொதுத்துறை வங்கி, தனியார்துறை வங்கி ஆகிய பங்குகள் சரிவில் உள்ளன. சிப்லா, டாக்டர்ரெட்டிஸ்லேப், ஓஎன்ஜிசி, என்டிபிசி, சன் பார்மா ஆகிய பங்குகள் லாபத்தில் உள்ளன. ஹின்டால்கோ, கிராஸிம், டெக் மகிந்திரா, விப்ரோ, டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவில் உள்ளன
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.