சரிவுடன் தொடங்கியது பங்குச்சந்தை : சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சி

By Pothy RajFirst Published Feb 17, 2022, 11:37 AM IST
Highlights

சர்வதேச காரணிகள், ரஷ்யா, உக்ரைன் இடையிலான பதற்றமான சூழல் காரணாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்கியதால், மும்பை, தேசியப்பங்குச்சந்தை இன்று சரிவுடன் காலை வர்த்தகத்தைத் தொடங்கின.

சர்வதேச காரணிகள், ரஷ்யா, உக்ரைன் இடையிலான பதற்றமான சூழல் காரணாக முதலீட்டாளர்கள் முதலீடு செய்யத் தயங்கியதால், மும்பை, தேசியப்பங்குச்சந்தை இன்று சரிவுடன் காலை வர்த்தகத்தைத் தொடங்கின.

பிஎஸ்இயில் பங்குவர்த்தகம் தொடங்கியவுடன் 300 புள்ளிகள் வரை உயர்ந்தாலும், திடீரென ஊசலாட்டம் நிலவியதால், 117 புள்ளிகள் சரிந்து, 57,900புள்ளிகளாகக் குறைந்து, பெரும் ஊசலாட்டத்தில் இருந்தது. 

அதேபோல தேசியப்பங்குச்சந்தையான நிப்டியும் வர்த்தகம் தொடக்கத்தில் 23.45 புள்ளிகள் சரிந்து 17,298 புள்ளிகளாகச் சரிந்தது. இன்டஸ்இன்ட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஹெச்டிஎப்சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. 16 முக்கிய நிறுவனங்களின் பங்கு விற்பனை மந்தமாக இருந்து வருகிறது

உக்ரைனில் ரஷ்யாவின் போர் தொடுப்பு இருக்கலாம் என்ற அச்சத்தால் ஆசியப் பங்குச்சந்தையிலும் இதே ஊசலாட்டம் நிலவுகிறது. இதனால் முதலீட்டாளர்கள் அச்சமின்றி முதலீடு செய்யத் தயங்குவதால் ஏற்ற, இறக்கத்துடனே வர்த்தகம்  சென்றது. இதற்கிடையே உக்ரைனில் ரஷ்யாவின் போர்தொடுப்பு எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று அமெரிக்கா நேற்று எச்சரித்திருப்பதால், உலகச் சந்தைகளில் இந்த ஊசலாட்டம் நிலவுகிறது.

சர்வதேசச் சந்தையில் பிரன்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் 0.86% குறைந்து ஒரு பேரல் 93.99 டாலராக இருக்கிறது. 

இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து நேற்று ரூ.1,890 கோடி மதிப்பிலான பங்குகளை அன்னிய முதலீட்டாளர்கள் விற்பனை செய்துள்ளனர். இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 14காசு குறைந்து, ரூ.75.18ஆக இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அதை வாங்குவதற்காக டாலர்கள் வெளியேற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே வருகிறது.
 

click me!