
கிரிப்டோகரன்சியை வைத்திருப்பவர்கள், அதை வர்தத்கம் செய்பவர்கள், உருவாக்குபவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் மத்திய அரசு புதிய திட்டம் கொண்டுவர உள்ளது.
2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ததில் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்றாகப் பார்க்கப்படுவது ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் ரூபாயும், டிஜிட்டல் சொத்துக்கள், கிரிப்டோகரன்சியின் மூலம் பெறப்படும் வருமானத்துக்கு 30 சதவீதம் வரி ஆகியவைதான். கிரிப்டோகரன்சியின் மூலம் கிடைக்கும் வருவாய் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தும் டிஜிட்டல் கரன்சிக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைக்கும். ஆனால், என்னதான் வரிவிதிப்புக்கு உட்படுத்தப்பட்டாலும், உலகளவில் புழக்கத்தில் இருக்கும் கிரிப்டோகரன்சிகளான பிட்காயின், எதிரியம் அல்லது என்எப்டிக்கு ஒருபோதும் அங்கீகாரம் அளி்க்கப்படாது, வரிசெலுத்தி வர்த்தகம் செய்வதால் சட்டபூர்வமானது என்ற கேள்விக்கே இடமில்லை என்று மத்திய நிதிஅமைச்சகம் விளக்கியுள்ளது.
இந்நிலையில் கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்பவர்கள், அதை பரிமாற்றம்செய்பவர்கள், அதை உருவாக்குபவர்களுக்கு அடுத்த செக் வைக்கும் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி வருகிறது.
அதாவது, கிரிப்டோகரன்சி வர்த்தகம் செய்தாலோ அல்லது அதை உருவாக்கினாலோ ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன, 18% வரை ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு உட்படு்த்தப்படலாம் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக மத்திய மறைமுகவரிகள் வாரியத்தின் தலைவர்(சிபிஐசி) விவேக் ஜோரி, நாளேடு ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம், கிரிப்டோகரன்சி வர்த்தகம் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரப்படுமா எனக் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “ கிரிப்டோகரன்சிகளை நேரடியாக காயின்பேஸ், பினான்ஸ், கியான்ஸ்விட்ச், பிட்பினெக்ஸ், வாசிர்எக்ஸ் உள்ளிட்ட எந்த தளத்தில் இருந்து வாங்கினாலும் விற்பனை செய்தாலும் அதை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். இதுதொடர்பாக எங்களின் வரைவு அறிக்கையை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்புவோம்.
கிரிப்டோகரன்சி வர்த்தகத்துக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் ஆலோசித்து வருகிறோம். கிரிப்டோகரன்சியை விற்பனை செய்யவும், வாங்கவும் உதவும் பிளாட்ஃபார்ம்கள் அந்த சேவையை செய்யும்போது அது ஜிஎஸ்டி வரிவரம்புக்குள் வந்துவிடும். அதற்கு அதிகாரிகள் வரிவிதிக்கக்கூடும். அதிகபட்சமாக 18 %ஜிஎஸ்டி வரி கூட விதிக்கப்படலாம்.
கிரிப்டோகரன்சி சப்ளை அல்லது மைனிங் என்பதை விரிவாக ஆலோசிக்க வேண்டியுள்ளது. கிரிப்டோவை உருவாக்கினால் அது சப்ளை பகுதிக்கு வருமா அல்லது இல்லையா என்பது முதல் கேள்வி, நான் கிரிப்டோவை வைத்திருந்தால், அல்லது யாருக்கேனும் விற்றால் அதற்கு ஒரு தளத்தை பயன்படுத்த வேண்டும். அதை எவ்வாறு அணுகுவது. இதுபோன்ற பல்வேறு கேள்விகளை நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.
கிரிப்டோ பரிவர்தத்னை என்பது பணப்பரிமாற்றமா அல்லது பொருட்கள் மற்றும் சேவைகள் சப்ளையா அல்லது சாதாரண ஒரு செயலா .இவையெல்லாம் ஜிஎஸ்டி விஷயத்தில் நாங்கள் ஆய்வு செய்துவருகிறோம். இந்த ஆய்வுகளை முடிக்க 2 அல்லது 3 மாதங்கள் ஆகலாம்
இவ்வாறு ஜோரி தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.