rupee hits all time low: டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: என்ன காரணம்? ஆர்பிஐ தலையிடுமா?

By Pothy RajFirst Published May 9, 2022, 10:58 AM IST
Highlights

rupee hits all time low :அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் இன்றுகாலை வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.77.42 ஆகக் சரிந்தது.
 

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் இன்றுகாலை வர்த்தகத்தில் வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு ரூ.77.42 ஆகக் சரிந்தது.

சீனாவில் அதிகரித்துவரும் கொரோனா பரவலால் லாக்டவுன்நீடித்து வருவது, அமெரிக்க பெடரல் வங்கி வட்டிவீதத்தை மேலும் உயர்த்தும் என்ற அச்சம், ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன் வங்கி வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற அச்சத்தால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள். இதனால் டாலருக்கான தேவை அதிகம் ஏற்பட்டதால், ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது

இதுபோன்று டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்திக்கும் நேரத்தில் ரிசர்வ் வங்கி சந்தையில் தலையிடும். தன்னிடம் இருக்கும் அந்நியச் செலாவணியை வெளியிட்டு சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்தி, ரூபாய் மதிப்பு மேலும் சரியாமல் தடுக்கும். ஆனால், இதுவரை ரிசர்வ் வங்கி தலையிடவில்லை.

வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவில் டாலருக்கு எதிராக ரூபாய் ரூ.77.05 ஆகச் சரிந்திருந்தது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று முதலீ்ட்டை திரும்பப்பெறுவதில் ஆர்வம் காட்டியதால், ரூபாய் மதிப்பு சர்ரென சரிந்து, ரூ.77.42 ஆக வீழ்ச்சி அடைந்தது. 

உக்ரைன் மீது ரஷ்யா மீ்ண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியிருப்பதால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் அதிகரிக்கும் என்ற அச்சம், உலகநாடுகள் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் வட்டிவீதத்தை உயர்த்தும் என்ற அச்சம், உலகப் பொருளாதாரம் சரிவை நோக்கி நகர்கிறதா என்ற முதலீட்டாளர்கள் அச்சமே முதலீட்டை திரும்பப்பெறக் காரணமாக சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் டாலரின் மதிப்பு உயரந்து வருகிறது. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி வீதத்தை 50 புள்ளிகள் உயர்த்தியதைத் தொடர்ந்து டாலர் மதிப்பு தொடர்ந்து 5-வது வாரமாக ரூபாய்க்கு எதிராக அதிகரித்து வருகிறது

அதுமட்டுமல்லாமல் 2022ம் ஆண்டுக்குள் அமெரி்க்க பெடரல் வங்கி 200 புள்ளிகள் வரை வட்டிவீதத்தை உயர்த்தும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து அதிகஅளவு முதலீட்டை திரும்பப் பெற்று வெளியேறுவதே ரூபாய் மதிப்பு சரிவுக்கு காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து மே மாதத்தின் முதல் வாரத்தில் மட்டும் ரூ.6 ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீட்டை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். 2022ம் ஆண்டு மார்ச் மாதம் வரை அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து ரூ.1.65லட்சம் கோடி முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்.


 

click me!