மோட்டார்சைக்கிள் வெளியீட்டை திடீரென தள்ளிவைத்த ராயல் என்ஃபீல்டு - காரணம் இது தான்?

By Kevin KaarkiFirst Published Jan 28, 2022, 12:47 PM IST
Highlights

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் வெளியீட்டு திட்டத்தை மாற்றி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் 2022 ஆண்டை புதிய ஸ்கிராம் 411 மாடலுடன் துவங்க திட்டமிட்டு இருந்தது. எனினும், கொரோனா வைரஸ் பாதிப்பின் மூன்றாவது அலை காரணமாக வெளியீட்டை ராயல் என்பீல்டு ஒத்துவைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முந்தைய தகவல்களின் படி புதிய ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. 

எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 மோட்டார்சைக்கிள் மார்ச் மாதம் தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. கொரோனா மூன்றாவது அலை காரணமாகவே ஸ்கிராம் 411 வெளியீடு தாமதமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான ஆட்டோ உற்பத்தியாளர்கள் தங்களின் அறிமுக நிகழ்வுகளை முற்றிலும் டிஜிட்டல் தளத்திலேயே மேற்கொண்டு வருகின்றன.

2022 ஆண்டு ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் முதல் மாடலாக ஸ்கிராம் 411 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் அட்வென்ச்சர் மாடலான ஹிமாலயனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இது அதிகபட்சமாக ரோட்-சார்ந்த வேரியண்ட் ஆகும். வெளியீடு விரைவில் நடைபெற இருப்பதை ஒட்டி புதிய ஸ்கிராம் 411 சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகின.

இதுவரை வெளியாகி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் படி புதிய ராயல் என்ஃபீல்டு ஸ்கிராம் 411 மாடலில் டூயல் டோன் பியூவல் டேன்க், கிரே நிற ஹெட்லேம்ப் கவுல் வழங்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதன் முன்புற இண்டிகேட்டர்கள் வேறு இடத்தில் பொருத்தப்பட்டுள்ளன. இத்துடன் டுவின் டையல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறம் 18 இன்ச் அல்லது 19 இன்ச் அளவு சக்கரங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய ஸ்கிராம் 411 மாடலிலும் ஹிமாலயன் மாடலில் உள்ளதை போன்றே 411சிசி என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 24.3 பி.ஹெச்.பி. திறன், 32 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. இந்திய சந்தையில் புதிய ஸ்கிராம் 411 மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம்.
 
இந்தியாவில் புதிய ஸ்கிராம் 411 மாடலின் விலை ரூ. 1.90 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கும் என தெரிகிறது. ஸ்கிராம் 411 மட்டுமின்றி ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ஹண்ட்டர் 350 அல்லது ஷாட்கன் 650 மோட்டார்சைக்கிள் மாடல்களையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.

click me!