Nissan Micra electric : 400 கி.மீ. ரேன்ஜ் - பிரபல ஹேட்ச்பேக்கை எலெக்ட்ரிக் காராக மாற்றும் நிசான்

By Kevin KaarkiFirst Published Jan 28, 2022, 10:48 AM IST
Highlights

நிசான் நிறுவனம் தனது பிரபல மைக்ரா ஹேட்ச்பேக் மாடலை விரைவில் முற்றிலும் புதிதாக மாற்ற இருக்கிறது.

நிசான் நிறுவனம்  தனது மைக்ரா ஹேட்ச்பேக் காரை முழுமையாக மாற்றி எலெக்ட்ரிக் மாடலாக அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் சில ஆண்டுகளுக்கு முன் நிசான் மைக்ரா விற்பனை நிறுத்தப்பட்டு  விட்டது. எனினும், சர்வதேச சந்தையில் இந்த மாடல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வரிசையில், தற்போது இதுவும் மாற்றப்பட்டு எலெக்ட்ரிக் கார் வடிவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய மைக்ரா எலெக்ட்ரிக் வேரியண்ட் முற்றிலும் புது எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு வருகிறது. இது ரெனால்ட் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட பிளாட்ஃபார்ம் ஆகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிசான்-ரெனால்ட்-மிட்சுபிஷி அலையன்ஸ் சார்பில் 23  பில்லியன் யூரோக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக முதலீடு செய்யப்பட இருக்கின்றன. இந்த கூட்டணியின் கீழ் புதிய எலெக்ட்ரிக் கார் உருவாக்கப்படுகிறது.

மைக்ரா எலெக்ட்ரிக் வேரியண்ட் CMF-BEV பிளாட்ஃபார்மில் உருவாகிறது. இதே பிளாட்ஃபார்மில் ரெனால்ட் 5 மாடலும் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பிளாட்ஃபார்ம் 2024 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதில் சுமார் 400 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் வழங்கும்  பேட்டரிகளை வைக்க முடியும். ஒவ்வொரு ஆண்டும் இந்த கூட்டணி சார்பில் 2,50,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இது அடித்தளமாக அமையும். 

தற்போது நிசான் லீஃப் மற்றும் ரெனால்ட் சோ எலெக்ட்ரிக் வாகனங்கள் உருவாக்கப்பட்டு இருக்கும் CMF-EV பிளாட்ஃபார்மை விட புதிய பிளாட்ஃபார்ம் வாகன உற்பத்தி செலவை 33 சதவீதமும், எலெக்ட்ரிக் பயன்பாட்டை 10 சதவீதம் வரையிலும் குறைக்கும். புதிய  CMF-BEV நிசான்-ரெனால்ட்-மிட்சுபிஷி அலையன்ஸ் உருவாக்கும் ஐந்து பிளாட்ஃபார்ம்களில் ஒன்று ஆகும். இந்த திட்டத்தின் கீழ் உருவான முதல் பிளாட்ஃபார்ம் CMF-EV ஆகும். இந்த பிளாட்ஃபார்மில் நிசான் ஆரியா மற்றும் ரெனால்ட் மெகேன் இ-டெக் எலெக்ட்ரிக் போன்ற மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ஐந்து எலெக்ட்ரிக் வாகன பிளாட்ஃபார்ம்களில் மொத்தம் 30 எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்க இந்த கூட்டணி திட்டமிட்டு இருக்கிறது. ஐந்து பிளாட்ஃபார்ம்களில் 90 சதவீத எலெக்ட்ரிக் கார்கள் 2030 ஆம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.  

"புதிய மாடல் நிசான் மூலம் வடிவமைக்கப்படுகிறது. இதன் பொறியியல் மற்றும் உற்பத்தி பணிகளை ரெனால்ட் மேற்கொள்ள இருக்கிறது. இதன் மூலம் எங்களின் கூட்டணியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள இருக்கிறோம்," என நிசான் நிறுவனத்தின் மூத்த நிர்வாக  அதிகாரி அஷ்வானி குப்தா தெரிவித்தார்.  

இரண்டு பிராண்டுகளும் இந்தியாவில் பல்வேறு வாகனங்களை விற்பனை செய்து வந்தாலும், இவை அனைத்தும் சென்னையில் உள்ள ஒரே ஆலையில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களுக்கு இந்தியா சிறந்த ஏற்றுமதி தளமாக இருக்கிறது. இரு நிறுவனங்களின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியா வருமா என்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

click me!