
ரிசர்வ் வங்கி திடீரென கடனுக்கான வட்டிவீதத்தை உயர்த்தியும், ரொக்கக் கையிருப்பு விகிதத்தை உயர்த்தி வெளியிட்ட அறிவிப்பால், பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று பிற்பகலில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் வெளியிட்ட அறிவிப்பில் “ நாட்டில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது, பொருளாதார வளர்ச்சிக்கும் ஊக்கமளிக்க வேண்டியுள்ளது. தொடர்ந்து 3 மாதங்களாக பணவீக்கம் கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தைக் கடந்துள்ளது.
7 சதவீதத்தையும் ஏப்ரல் மாதத்தில் கடக்கக்கூடும். ஆதலால் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொருட்டு கடனுக்கான வட்டிவீதம் உயர்த்தப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனாவில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையைலிருந்து மீண்டுவர வட்டிவீதம் 40 புள்ளிகள் குறைக்கப்பட்டது.
அது திரும்பப் பெறப்படுகிறது. வட்டிவீதம் 40புள்ளிகள் உயர்த்தப்பட்டு 4.40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு விகிதம் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் புழக்கத்திலிருந்து ரூ.87 ஆயிரம் கோடி வங்கிக்குள் திரும்ப வரும்” எனத் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பால், பங்குச்சந்தையில் பெரும் சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 1307 புள்ளிகளும், நிப்டியில் 392 புள்ளிகள் குறைந்து 16,678 புள்ளிகளும் குறைந்தன.
ரிசர்வ் வங்கியின் திடீர் அறிவிப்பால், மும்பைப் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.6.10 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. செவ்வாய்கிழமை வர்த்தகம் முடிவில் ரூ.265.88 லட்சம் கோடியாக இருந்த சந்தை மதிப்பு இன்று மாலை ரூ.259.73 லட்சம் கோடியாகக் குறைந்தது.
கடந்த மாதம் பங்குச்சந்தையில் ஏற்பட்ட சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் 5ம் தேதி மும்பை பங்குச்சந்தையின் மதிப்பு ரூ.273.73 லட்சம் கோடியாக இருந்தது.
ஜியோஜித் பைனான்ஸியல் சர்வீஸ் தலைமை முதலீட்டு ஆலோசகர் வி.கே.விஜய குமார் கூறுகையில் “ எல்ஐசி ஐபிஓ நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை உயர்த்தியது வியப்பாக இருக்கிறது. பணவீக்கத்தை சமாளிப்பதற்காக நிதிக்கொள்கைக் குழு எடுத்த முடிவாகும். இந்த அறிவிப்பால் மும்பைப் பங்குச்சந்தையில் 1000புள்ளிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. 10 ஆண்டு பங்குபத்திரம் மதிப்பு 7.39 சதவீதமா உயர்ந்தது” எனத் தெரிவித்தார்
பின்ரெக்ஸ் ட்ரெஸரி அட்வைசர்ஸ் நிறுவனத்தின் தலைவர்அனில் குமார் பன்சாலி கூறுகையில் “ வங்கிகளி்ன் ரொக்கக் கையிருப்பு விகிதம் உயர்த்தப்பட்டிருப்பதால், புழக்கத்திலிருந்து ரூ.87ஆயிரம் கோடி வங்கிக்குள் செல்லும். அடுத்த 5 முதல் 6 மாதங்களில் இது ரூ.2 லட்சம் கோடியாக மாறும். அடுத்தசில நாட்களுக்கும் பங்குச்சந்தையில் ஊசலாட்டத்துடனே இருக்கும். ரிசர்வ் வங்கியின்திடீர் அறிவிப்பிலிருந்து முதலீட்டாளர்களும், சந்தையும் மீண்டுவரசில நாட்களாகும். இதற்கிடையே அமெரிக்க பெடரல் வங்கியும் வட்டிவீதத்தை உயர்த்தினால், பங்குச்சந்தை பெரிய சரிவை நோக்கிச் செல்லும்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.