
நாட்டில் பணவீக்கம் கட்டுக்கடங்காத நிலையை எட்டுவதைத் தடுக்கும் வகையில், குறுகிய காலக் கடனுக்கான வட்டிவீதத்தை 40 புள்ளிகளை உயர்த்தி ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று அறிவித்தார்.
கட்டுக்கடங்காத பணவீக்கம்
கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப்பின் நடந்த 11 நிதிக்கொள்கைக் கூட்டத்திலும் வட்டி வீதம் மாற்றப்படாமல் தொடர்ந்து 4 சதவீதம் என்ற அளவிலேயே நீடித்தது, ரிவர்ஸ் ரெப்போ 3.5% என்றும் நீடித்து வருகிறது
ஆனால், நாட்டில் பணவீக்கத்தை ரிசர்வ் வங்கியின் 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைத்திருந்தது. ஆனால், 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம்வரை சில்லரை பணவீக்கம் 6 சதவீதத்தைக் கடந்து வருகிறது.அதிலும் கடந்த மார்ச் மாதம் 6.95 சதவீதம் என ஏறக்குறைய 7 சதவீதத்தைத் தொட்டது.
நாட்டில் பணவீக்கம் கட்டுக்கடங்காத நிலையை எட்ட இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி மவுனமாக இருப்பதும், பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறியது பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூட இதுதொடர்பாக சமீபத்தில் பேசியிருந்தார். வட்டிவீதத்தை உயர்த்துவதை தேசத்துரோகம் என்று அரசியல் தலைவர்கள் நினைக்கக்கூடாது எனத் தெரிவித்திருந்தார்.
மார்ச் மாதத்தில் நாட்டின் சில்லரைப் பணவீக்கம் 6.95சதவீதமாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் வைத்திருக்க வேண்டும் என இலக்கு வைத்துள்ளது. ஆனால் கட்டுப்பாட்டு அளவைவிட பணவீக்கம் அதிகரித்ததால், வரும் ஜூன் மாதம் நடக்க இருக்கும் நிதிக்கொள்கைக் கூட்டத்தில் கடனுக்கான வட்டிவீதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால், அனைத்தையும் பொய்யாக்கி, இன்று நடந்த அதிகாரபூர்வமில்லாத நிதிக்கொள்கைக் கூட்டத்தின் முடிவில், ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டிவீதத்தை 40 புள்ளிகளும், ரொக்கக் கையிருப்பு விகிதத்தை 50 புள்ளிகளும் உயர்த்தியுள்ளது.
இதனால் என்ன நடக்கும்
கடனுக்கான வட்டி வீதம் அதாவது ரெப்போ ரேட் 40 புள்ளிகள் உயர்ந்து 4.40% உயர்ந்திருந்திருப்பதால் கடனுக்கான வட்டிவீதம் அதிகரிக்கும். மாதந்தோறும் இஎம்ஐ செலுத்திவருவோர் கூடுதலாகச் செலுத்த வேண்டியதிருக்கும். வீட்டுக்கடன், வாகன்கடன் பெற்றிருப்போரும் கூடுதலாக வட்டி செலுத்த வேண்டியதிருக்கும்.
ஏன்இந்த திடீர் அறிவிப்பு
ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 6சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைத்துள்ளது. ஆனால், ஜனவரி மாதத்திலிருந்து 6 சதவீதத்தை கடந்து சென்ற பணவீக்கம் மார்ச் மாதம் 7சதவீதம் உயர்ந்தது. நிச்சயமாக ஏப்ரல் மாதத்திலும் இதேபோன்றுதான் அதிகரிக்கும். பணவீக்கம் அதிகரித்தாலே பொருளாதார வளர்ச்சி குறையும். பணவீக்கம் அதிகரிப்பால்தான் பல ரேட்டிங் நிறுவனங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கை குறைத்து வருகின்றன.
இதனால் ஜூன் மாதம் நிதிக்கொள்கையில்தான் வட்டிவீதத்தை உயர்த்த வேண்டும் என்று திட்டமிட்டால் இடைப்பட்ட ஒரு மாதத்தில் பணவீக்கம் 7 சதவீதத்தைக் கடந்து செல்லவாய்ப்பு உண்டு. இதனால்தான் பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் உடனடியாக சந்தையில் இருக்கும் பணப்புழக்கத்தைக் குறைக்கவும் வட்டிவீதத்தையும், ரொக்கக் கையிருப்பு வீதத்தையும் ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.
1. சமீபத்திய ஜிடிபி விவரங்கள் வெளியீ்ட்டில் உலகளவில் பொருளதார வளர்ச்சி வேகம்குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது
2. அதிகாரப்பூர்வமற்ற வகையில் நிதிக்கொள்கைக் கூட்டம் கடந்த 2ம் தேதி கூடி விவாதிக்ககப்பட்டது.
3. இதன்படி குறுகியகாலக் கடனுக்கான வட்டி வீதம் 4 சதவீதத்திலிருந்து 4.40% சதவீதமாக உயர்த்தப்படுகிறது
4. ரிசர்வ் ரெப்போ ரேட் 4.40 சதவீதமாக இருக்கும்
5. வங்கிகளின் ரொக்கக் கையிருப்பு வீதம் 50 சதவீதம் உயர்த்தப்பட்டு, 4.50 சதவீதமாக அதிகரிக்கப்படுகிறது
6. ரொக்கக் கையிருப்பு வீதம் உயரும் போது, வங்கிகள் எளிதாகக் கடன் வழங்க முடியாது. நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரூ.83,711 கோடி பணம் வங்கிக்குள் கொண்டு வரப்படும்.
7. இதன் மூலம் பணவீக்கம் படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டுவரப்படும், பணப்புழக்கம் குறையும்.
8. மார்ச் மாதம் ப ணவீக்கம் 7 சதவீதமாக உயர்வதற்கு உணவுப் பொருட்களின் விலை உயர்வுதான் காரணம்
9. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, உணவுப் பொருட்கள்விலை உயர்வால் ஏப்ரல் மாதத்திலும் பணவீ்க்கும் மேலும் அதிகரிக்கும்
10. உணவுப்பொருட்கள் விலை, சமையல் எண்ணெய்விலை தொடர்ந்து உயரும். உணவுப்பொருட்களால் வரும் சில்லரைப் பணவீக்கம் தொடர்ந்து உயரும்
11. பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கும் அதேநேரத்தில் பணவீக்கத்தின் அளவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதையும் ரிசர்வ் வங்கி உறுதி செய்யும்
இவ்வாறு சக்தி காந்த தாஸ் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.