2021-22ம் ஆண்டுக்கான மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக ரூ.30ஆயிரத்து 307 கோடிதருவதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையில் மத்திய வாரியக் குழுவின் 596வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
2021-22ம் ஆண்டுக்கான நிதியாண்டில் உபரியாக இருக்கும் ரூ.30ஆயிரத்து 307 கோடியை மத்திய அரசுக்கு வழங்குவதற்கு ரிசர்வ் வங்கியின் வாரியக்குழு இன்று ஒப்புதல் அளி்த்துள்ளது. அதேசமயம், இடர்பாடு நேரத்தில் சமாளிக்கக் கூடிய நிதியை 5.50 சதவீதம் என்று பராமரிக்கவும் வாரியக் குழு முடிவு செய்துள்ளது.
இந்த வாரி்யக் கூட்டத்தில் நாட்டின் நடப்பு பொருளாதாரச் சூழல், உலகப் பொருளாதாரநிலை, உள்நாட்டளவில் இருக்கும் பொருளாதாரச் சவால்கள், சமீபத்திய புவிசார்அரசியல் நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன
ரஷ்யா உக்ரைன் போர் காரணமாக உலகப் பொருளாதாரச் சூழல் கடும் நெருக்கடிக்குள்ளாகி வரும்நேரத்திலும், மத்திய அரசுக்கு நிதிப்பற்றாக்குறை அதிகரிக்கும் என்று கூறப்பட்ட நிலையிலும் இந்த ஈவுத் தொகையை ரிசர்வ் வங்கி வழங்க உள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக 9 மாதங்களில் ரூ.99ஆயிரத்து 122 கோடியை ரிசர்வ் வங்கி வழங்கியது. அதாவது 2020ஜூலை முதல் 2021 மார்ச் வரையிலான தொகையை வழங்கியது. பொதுவாக ரிசர்வ் வங்கி ஜூலை-ஜூன் நிதியாண்டைத்தான் பின்பற்றி வருகிறது, ஆனால், மத்திய அரசு ஏப்ரல்-மார்ச் நிதியாண்டைப் பின்பற்றுகிறது. ஆனால், மத்திய அரசின் நிதியாண்டுக்கு ஏற்ப கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி வேகமாக ஈவுத்தொகையை வழங்கியது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.