
கோலொகேஷன் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள என்எஸ்இ முன்னாள் இயக்குநர் சித்ரா ராம்கிருஷ்ணா தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் சிபிஐ பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சித்ரா ராம்கிருஷ்ணா ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுவை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஆனந்த் சுப்பிரமணியன் 2-வதுமுறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனுவையும் நீதிமன்றம்தள்ளுபடி செய்தது. இருவருக்கும் ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து, தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, சித்ரா ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
என்எஸ்இ அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக சித்ரா ராமகிருஷ்ணா இருந்தபோது, என்எஸ்இ சர்வர்களுக்கு அருகே, சில குறிப்பிட்ட பங்குதரகு நிறுவனங்களின் சர்வர்கள் வைக்கப்பட்டன.
இதனால், பங்குவிற்பனை, விலை, பரிமாற்றம் குறித்த தகவல்கள் விரைவாக அந்த தரகு நிறுவனங்களுக்குக் கிடைத்தால், கோடிக்கணக்கில் லாபமீட்டின.இது தொடர்பான புகார் எழுந்ததையடுத்து, கடந்த 2018ம்ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.
இதற்கிடையே சித்ரா தனது பதவிக்காலத்தில் தனக்கு ஆலோசகராக ஆனந்த் சுப்பிரமணியன் என்பவரை நியமித்தார். அவருக்கு குறுகிய காலத்தில் கோடிக்கணக்கில் ஊதிய உயர்வு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டு குறித்து செபி விசாரி்த்து, சித்ராவுக்கு ரூ.3 கோடி, ஆனந்த் சுப்பிரமணியத்துக்கு ரூ.2 கோடி அபராதமும் விதித்தது.
கோ-லொகேஷன் வழக்கு குறித்து விசாரித்த சிபிஐ, ஆனந்த் சுப்பிரிமணியம், சித்ராவை கைது செய்து விசாரணை நடத்தியது. இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.
ஏற்கெனவே சித்ரா ராம்கிருஷ்ணா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் சித்ரா ராம்கிருஷ்ணா தாக்கல் செய்த ஜாமீன் மனு நீதிபதி சுதிர் குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்குவது குறித்து சிபிஐ கருத்தை தெரிவிக்கக் கோரி நீதிபதி சுதிர் குமார் உத்தரவிட்டு வழக்கை வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சித்ரா ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. சமூகத்தில் சித்ரா ராம் கிருஷ்ணா செல்வாக்கனவர், பணம், வசதி, அதிகாரம் நிறைந்தவர், விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்துவிடுவார் என எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.