தொழில் தொடங்கணுமா? ரூ.10 லட்சம் கடன் உடனே கிடைக்கும்... மத்திய அரசு காட்டும் ஈஸியான வழி இதோ!

By SG BalanFirst Published Mar 11, 2024, 11:21 PM IST
Highlights

தொழில் முனைவோர்களுக்காக மத்திய அரசு 2015ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. இதில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. 

சொந்தமாக தொழில் தொடங்கும் திட்டத்துடன் ரெடியாக இருப்பவர்களுக்கு பணம் ஒரு பிரச்சினையாக இருக்கலாம். அவர்கள் கவலையே படவேண்டாம். மத்திய அரசின் முத்ரா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை வங்கிக்கடன் கொடுக்கப்படுகிறது.

தொழில் முனைவோர்களுக்காக மத்திய அரசு 2015ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தைத் தொடங்கியது. இதில் சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் விவசாயத்துக்கும் முத்ரா திட்டத்தில் கடன் பெற முடியாது.

முத்ரா கடன் எங்கே கிடைக்கும்?

முத்ரா திட்டத்தின் கீழ், வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மூலம் ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் வரை கடன் கொடுக்கப்படுகிறது. இந்தக் கடன் தொகையைப் பெற எதையும் பிணையாகக் கொடுக்க வேண்டாம். தனிநபர் அடையாளம் தொடர்பான அடிப்படை ஆவணங்களை மட்டும் வைத்து கடன் பெறலாம்.

முத்ரா கடன் யாருக்குக் கிடைக்கும்?

இந்திய குடிமகனாக இருக்கும் அனைவரும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி பெறலாம். சிறு வணிக நிறுவனம் ஒன்றைத் தொடங்க தயாராக இருக்கும் எவரும் இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம். உற்பத்தி, வர்த்தகம் மற்றும் சேவை துறைகளில் தொழில் செய்ய விரும்புவோரும் கடன் பெறலாம்.

முத்ரா கடன் கோரும் விண்ணப்பதாரர் குறைந்தது 3 ஆண்டுகள் வணிகம் செய்த அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். 24 முதல் 70 வயதுக்குள் இருக்கும் தொழில் முனைவோராக இருப்பதும் அவசியம்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

இணையதளம் மூலமாகவே முத்ரா கடன் பெற விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பெயர், ஈமெயில் முகவரி, மொபைல் எண் போன்ற விவரங்களை வைத்துப் பதிவு செய்தால் போதும். முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்களுக்குரிய வட்டி விகிதம் ரிசர்வ் வங்கி அளிக்கும் வழிகாட்டுதல்கள் அடிப்படையில் கடன் வழங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களால் நிர்ணயம் செய்யப்படும்.

click me!