நிதி அமைச்சகம் நடத்தவுள்ள கூட்டத்தையொட்டி, பிபிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது
பாதுகாப்பான மற்றும் அதிக வட்டி வழங்கும் முதலீடுகளில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி என்று அழைக்கப்படும் public provident fund (PPF). மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை உண்டாக்கம், 1968 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகத்தின் மூலம், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. சேமிப்பு பழக்கத்தை கடந்து, தனியார் பாதுகாப்பில் பணிபுரியும் மக்களுக்கு, ஓய்வூதியத்திற்கான பாதுகாப்பு பலன்களையும் இத்திட்டம் வழங்குகிறது.
ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் பெரும்பாலும் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்கின்றனர். ஏனெனில், பாதுகாப்பான முதலீடு, நல்ல வட்டி, வரி சலுகைகள் போன்ற பலன்கள் கிடைக்கின்றன. பிபிஎஃப் திட்டத்துக்கு தற்போது 7.1 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், நிதி அமைச்சகம் நடத்தவுள்ள கூட்டத்தையொட்டி, பிபிஎஃப் வட்டி விகிதம் உயர வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.
பிற சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றங்களைச் செய்த போதிலும், PPF வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்திருக்கும் அரசாங்கத்தின் முடிவுக்கு, இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் வரிச்சலுகையும் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்படுக்கிறது.
இந்த நிலையில், நிதி அமைச்சகம் இந்த மாத இறுதிக்குள் பிபிஎஃப் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை காலாண்டு மதிப்பாய்வு செய்ய உள்ளது. இந்த கூட்டத்தில் பிபிஎஃப் வட்டி விகிதம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த 2020அம் ஆண்டு ஏப்ரல் முதல் பிபிஎஃப் வட்டி விகிதங்கள் மாறாமல் உள்ளதே, அவர்களின் இந்த பலத்த எதிர்பார்ப்புக்கு காரணம்.
ஆனால், தற்போதைய பொருளாதார சூழலில், வட்டி விகித உயர்வுக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். பொருளாதார நிலைமைகள் மற்றும் வட்டி விகித சுழற்சி இன்னும் உச்சத்தை எட்டவில்லை என்பதன் அடிப்படையில், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) போன்ற சிறு சேமிப்புத் திட்டங்களுக்கு தற்போதைய வட்டி நிலையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வட்டி விகிதங்கள் அதிகரிப்பது எப்போதுமே நல்லது என்றாலும், நிலவும் சூழ்நிலைகள், பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இந்த தருணத்தில் அதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், நிதிப் பொறுப்பை ஆதரிப்பதற்கும் பொருளாதார மீட்சியை வளர்ப்பதற்கும் அரசாங்கம் முன்னுரிமை கொடுக்க அதிக வாய்ப்புள்ளது என்பதால், தற்போதைய வட்டி விகிதங்களையே தக்க வைத்துக் கொள்ள அதிக வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக, பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் சில காலத்திற்கு இதே நிலையிலேயே தொடரலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றன. நிதிச் சந்தைகளின் நிலை, அரசாங்க வரவு செலவுக் கொள்கைகள், பொருளாதாரம் உள்ளிட்டவைகள் எதிர்காலங்களில் வட்டி விகிதங்களில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கிறார்கள்.