
தலைநகர் டெல்லி, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் சிஎன்ஜி கேஸ்விலை இன்று உயர்த்தப்பட்ட நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்த்தப்படவில்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உன்னிப்பாக கவனித்துவரும் எண்ணெய் நிறுவனங்கள் இன்னும் இரு நாட்களுக்குப்பின் முடிவு எடுக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிஎன்ஜி கேஸ்
டெல்லி, என்சிடி ஆகிய பகுதிகளில் சிஎன்சி கேஸ் விலை கிலோவுக்கு ஒருரூபாய் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரூ.56.51லிருந்து, ரூ.57.51ஆக அதிகரித்துள்ளது. டெல்லி தவிர்த்து, நொய்டா, கிரேட்டர் நொய்டா, காஜியாபாத் ஆகிய நகரங்களிலும் சிஎன்ஜி கேஸ் விலை கிலோவுக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், மும்பையில் சிஎன்சி கேஸ் விலை உயர்த்தப்படவில்லை.
விலை உயர்வு
5 மாநிலத் தேர்தல் முடிந்தபின் பெட்ரோல், டீசல் விலை உயரும் என பரவலாகக் கூறப்பட்டநிலையில் இன்றும் விலை உயரவில்லை. டெல்லியில் பெட்ரோல் லிட்டர் ரூ.95.41, மும்பையில் ரூ.109.81, டெல்லியில் டீசல் லிட்டர் ரூ.86.87, மும்பையில் ரூ.94.14 ஆகவும் விற்கப்படுகிறது
பொதுத்துறை எண்ணெய் நிறுவனஅதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “ இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் விலையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன. விலையை உயர்த்தும் முன் இன்னும் இரு நாட்கள் காத்திருந்து முடிவு எடுப்பார்கள்.
காத்திருப்பு
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தொடர்பாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகள், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சக அதிகாரிகள் நேற்று நள்ளிரவுவரை ஆலோசனை நடத்தினர், அதன் முடிவில்தான் விலை இன்னும் உயர்த்தப்படாமல் இருக்கிறது, இன்னும் 2 நாட்கள் காத்திருகக முடிவுஎடுத்துள்ளார்கள். சர்வதேச சந்தையில் இப்போது கச்சா எண்ணெயில் இருக்கும் உயர்வு தற்காலிகமானதுதான். அதனால் இருநாட்களுக்குப்பின் முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
2 நாட்கள்
பொதுத்துறை எண்ணெய் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி கூறுகையில் “ பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தினால், அதன் தாக்கம் அத்தியாவசியப் பொருட்கள் மீது எழும் என மத்திய அரசு கவலைப்படுகிறது. அரசியல்ரீதியாக பெரிய பிரச்சினையாக மாறும் என கவலையில் இருக்கிறது. காகிதத்தின் அளவில் நாங்கள் எந்த முடிவையும் எடுக்க சுதந்திரம் இருக்கிறது, விலையை எப்படி வேண்டுமானாலும் மாற்றி அமைக்க உரிமை இருக்கிறது. ஆனால், உண்மையில் இப்போது நிறுவனங்கள் விலையை உயர்த்தாமல் இழப்பி்ல் இருக்கின்றன” எனத் தெரிவித்தார்
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெயை ஒருபேரலை 126 டாலருக்கு மத்திய அரசு வாங்குகிறது. ஆனால், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 81 டாலராகத்தான் இருந்தது. இந்த விலை உயர்வால் ஏற்பட்ட இழப்பைச் சரிக்கட்ட பெட்ரோல், டீசலுக்கு லிட்டருக்கு ரூ.15 முதல் ரூ.22வரை உயர்த்துவது அவசியமாகும் என பல்வேறு ரேட்டிங் நிறுவனங்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.