இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற மக்களவை தள்ளி வைக்கப்பட்டுள்ளது
மத்திய பட்ஜெட்டானது, பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கி ஏப்ரல் முதல் வாரம் வரை இரண்டு கட்டங்களாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசுத் தலைவரின் உரையுடன் கூடிய பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்ரவரி 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அரசு அலுவல்களின் அவசரங்களுக்கு உட்பட்டு விரைவாக நிறைவடையவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அந்தவகையில், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சரியாக இன்று காலை 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சி அமைந்த பின் இந்திய பொருளாதாரம் ஊக்கம் பெற்றுள்ளதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் பயணிப்பதாகவும் தெரிவித்தார். நாட்டின் மொத்த கடன் ரூ.14 லட்சம் கோடியாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் ஆகிய 4 தரப்பினருக்கு முக்கியத்துவம் அளித்து பாஜக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்த நிர்மலா சீதாராமன், பாஜகவுக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். பாஜக அரசின் திட்டங்களை பட்டியலிட்ட அவர், சில திட்டங்கள் அடுத்து வரவிருக்கும் ஆண்டுகளில் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தார். இடைக்கால பட்ஜெட் என்பதால், பெரிய அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை. குறிப்பாக, வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Union Budget 2024 live updates
இன்று காலை 11 மணிக்கு தனது பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரைய 58 நிமிடங்கள் வாசித்தார். தொடர்ந்து அவரது பட்ஜெட் உரை நிறைவுபெற்றதையடுத்து, நாடாளுமன்ற மக்களவை நாளை காலை 11 மணி வரை தள்ளி வைக்கப்பட்டது.
பாஜகவின் இரண்டாவது ஆட்சி காலத்தில் தாக்கல் செய்யப்பட்டும் கடைசி மற்றும் இடைக்கால பட்ஜெட் இதுவாகும். பிரதமர் மோடி அரசாங்கத்தின் கீழ் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். 2019ஆம் ஆண்டு முதல், மொத்தம் 5 முழு மத்திய பட்ஜெட்களையும், ஒரு இடைக்கால பட்ஜெட்டையும் அவர் தாக்கல் செய்துள்ளார்.
Union budget 2024 இந்தியாவில் 2 கோடி பெண்கள் லட்சாதிபதிகள்: நிர்மலா சீதாராமன் தகவல்!
இந்த ஆண்டில் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளதால், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படாமல் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட், பொதுத் தேர்தலுக்குப் பின்னர், புதிய அரசு அமைந்த பிறகு தாக்கல் செய்யப்படும். அந்த சமயத்தில், வரவிருக்கும் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கப்படும். அது ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும்.
மக்களவை தேர்தல் நடக்கும் ஆண்டில், மத்திய பட்ஜெட்டுக்கு பதிலாக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் என்பது ஒரு வகையான தற்காலிக பட்ஜெட் ஆகும். அரசாங்கம் அதன் செலவுகளை சில மாதங்களுக்கு சமாளிக்க இது உதவுகிறது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் மத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி விடாத வண்ணம், இடைக்கால பட்ஜெட்டில் கொள்கை முடிவுகள் எடுக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.