
நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக இருந்த ராஜீவ் குமார் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து புதிய துணைத் தலைவராக சுமன் கே பெரி நியமிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திடீர் ராஜினாமா
புதிய துணைத் தலைவராக சுமன் கே பெரி வரும் மே 1ம் தேதி பதவி ஏற்க உள்ளார். ராஜீவ் குமார் பதவிக்காலம் ஏப்ரல் 30ம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் திடீரென ஏன் ராஜினாமா செய்தார் என்பதற்கான விளக்கம் ஏதுமில்லை.
ராஜீவ் குமார் கடந்த 2017ம் ஆண்டு நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். சிறந்த பொருளாதார வல்லுநரான ராஜீவ் குமார், துணைத் தலைவராக இருநத் அரவிந்த் பனகாரியா ராஜினாமாவுக்குப்பின் நியமிக்கப்பட்டார்.
ராஜீவ் குமாரின் ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் ஏப்ரல் 30ம்தேதி முதல் அவர் விடுவிக்கப்படுவார் என்றும் மத்திய அரசு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய பங்களிப்பு
மத்திய அரசின் கொள்கை முடிவெடுப்பு, திட்டங்கள் வகுப்பு ஆகியவற்றிலும், நிதிஆயோக் கொள்கை உருவாக்கத்திலும் ராஜீவ் குமார் முக்கியப் பங்காற்றினார். குறிப்பாக வேளாண் துறை, அரசின் சொத்துக்களை ஒன்றுதிரட்டுதல், சொத்துக்களை விற்றல், மாவட்ட அளவிலான திட்டங்கள், மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்துதல் போன்றவை மீது ராஜீவ் குமார் கூடுதல் அக்கறை செலுத்தினார்.
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளதாரத்தில் டாக்டர் பட்டமும், லக்னோ பல்கலைக்கழகத்திலும் டாக்டர் பட்டமும் ராஜீவ் குமார் பெற்றவர். மத்திய அரசின் கொள்கை ஆய்வு மையத்தில் மூத்த ஆலோசகராகவும் ராஜீவ் குமார் பணியாற்றியிருந்தார்.
யார் இந்த பெரி
புதிய துணைத்தலைவராக பொறுப்பேற்க இருக்கும் பெரி, தேசிய பொருளாதார ஆய்வு மையத்தில் தலைமை இயக்குநராக பணியாற்றியவர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவிலும் பெரி இருந்தார். புள்ளியியல் ஆணையம், ரிசர்வ் வங்கியின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு, நிதிக்கொள்கை குழுவிலும் பெரி பணியாற்றியுள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.