NX 350h SUV : 2022 லெக்சஸ் NX மாடலுக்கான முன்பதிவு துவக்கம்

By Nandhini SubramanianFirst Published Jan 20, 2022, 10:47 AM IST
Highlights

லெக்சஸ் நிறுவனத்தின் புதிய ஆடம்பர எஸ்.யு.வி. மாடல் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

லெக்சஸ் நிறுவனத்தின் 2022 NX மாடல் வரும் வாரங்களில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. வெளியீட்டுக்கு முன் புதிய லெக்சஸ் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இரண்டாம் தலைமுறை NX மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மாடல் அதிநவீன டிசைன், புது பவர்டிரெயின் மற்றும் ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

"அசாத்திய திறன், சௌகரியமான இடவசதி மற்றும் ஸ்போர்டினஸ் போன்ற காரணங்களால்  இந்தியாவில் உள்ள எங்களின் வாடிக்கையாளர்களுக்கு அதிகம் பிடித்த மாடலாக லெக்சஸ் NX இருக்கிறது. புதிய NX மாடலை முடிந்த வரை வேகமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம். ஆடம்பர சந்தையில் லெக்சஸ் NX புதிய அத்தியாயத்தை படைக்கும்," என லெக்சஸ் இந்தியா தலைவர் நவீன் சோனி தெரிவித்துள்ளார். 

சர்வதேச சந்தையில் முதல் தலைமுறை  NX மாடல் 2014 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தையில் இந்த மாடல் 2018 ஆண்டு தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஏப்ரல் 2021 வாக்கில் உலகின் 90 நாடுகளில் லெக்சஸ் NX மாடல் விற்பனையில் பத்து லட்சம் யூனிட்களை கடந்தது. 

2022 லெக்சஸ் NX 350h அம்சங்கள்

புதிய மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் முந்தைய மாடலை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், புதிய மாடல் கூர்மையான தோற்றம் கொண்டிருக்கிறது. இத்துடன் ஒற்றை ஹெட்லேம்ப் யூனிட்கள், ஸ்பிண்டில் கிரில், புதிய பம்ப்பர்கள், நீண்ட ஹூட் மற்றும் LED டெயில் லேம்ப்கள் உள்ளன.

உள்புற கேபின் முற்றிலும் புதிதாக காட்சியளிக்கிறது. இதில் 9 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் மற்றும் புதிய ஸ்டீரிங் வீல் உள்ளது. சர்வதேச சந்தையில் லெக்சஸ் NX மாடலில் 360 டிகிரி கேமரா, ஆட்டோ ஹெட்லேம்ப்கள், வைப்பர்கள், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, வயர்லெஸ் மொபைல் சார்ஜிங் மற்றும் முன்புறம் எலெக்ட்ரிக் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. 

பாதுகாப்பிற்கு ஏ.பி.எஸ்., இ.பி.டி., இ.எஸ்.சி., டிராக்‌ஷன் கண்ட்ரோல், பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதிய லெக்சஸ் NX மாடலில் 2.5 லிட்டர் அட்கின்சன் சைக்கிள் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 192 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. இத்துடன் எலெக்ட்ரிக் மோட்டார்களும் வழங்கப்படுகின்றன. இவை இணைந்து 244 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். 

சர்வதேச சந்தையில் லெக்சஸ் NX மாடல் 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 2.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 199 ஹெச்.பி. மற்றும் 279 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்துகின்றன. 

இந்திய சந்தையில் புதிய லெக்சஸ் NX 350h- எக்ஸ்குசிட், லக்சரி மற்றும் எஃப்-ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும். தற்போது விற்பனை செய்யப்படும் NX மாடலும் இதே வேரியண்ட்களில் கிடைக்கின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 58.20 லட்சம், ரூ. 63.20 லட்சம் மற்றும் ரூ. 63.63 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

click me!