பிஎஃப் உறுப்பினர்கள் அவசர மருத்துவ தேவைக்கு முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறுவதற்கான தகுதி வரம்பை, ரூ.50,000 லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
பிஎஃப் என்பது ஊழியர்களின் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் தொகையாகும். நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட தொகையும், பணியாளர் சார்பில் குறிப்பிட்ட தொகையும் மாதம் மாதம் பிடித்தம் செய்யப்படுகிறது. அதன்படி 12% வரை ஒவ்வொரு மாதமும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு இந்த தொகையை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO இந்த சமூக நலத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஓய்வு காலத்தில் பெறும் ஓய்வூதிய நன்மைகள் தவிர பல்வேறு நன்மைகள் பிஃப் மூலம் ஊழியர்களுக்கு கிடைக்கின்றன.
இந்த நிலையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு அவசர மருத்துவ தேவைக்கு முன்கூட்டியே பணத்தை திரும்ப பெறுவதற்கான தகுதி வரம்பை, ரூ.50,000 லிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் பிஎஃப் பயனாளர்கள் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான செலவுகளை நிர்வகிக்க உதவும்.
இரண்டு கோயில்களுக்கு ரூ.50000000 காணிக்கை செலுத்திய ஆனந்த் அம்பானி!
இந்த மாற்றம் ஏப்ரல் 16 அன்று வெளியிடப்பட்ட EPFO சுற்றறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டது. அதில் “ 68J இன் கீழ் ரூ. 50,000 முதல் ரூ. 1,00,000 வரையிலான ஆட்டோ க்ளைம் செட்டில்மென்ட் வரம்பை அங்கீகரித்துள்ளது, என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் பிஎஃப் பயனர்கள் குறிப்பிட்ட மருத்துவ நிலைமைகளின் கீழ், ஒரு மாதம் அல்லது அதற்கு மேல் மருத்துவமனையில் அனுமதி, பெரிய அறுவை சிகிச்சைகள் மற்றும் காசநோய், தொழுநோய், பக்கவாதம், புற்றுநோய், மனச்சோர்வு அல்லது இதய நோய்கள் போன்ற தீவிரமான நோய்களுக்குப் பகுதியளவு திரும்பப் பெறுவதைக் கோர முடியும்.. அதற்கு ஒரு ஊழியரின் பிஎஃப் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் இருப்பு இருக்க வேண்டும். இந்த செயல்முறைக்கு படிவம் 31 தேவைப்படுகிறது, அதனுடன் பணியாளரின் நிறுவனம் மற்றும் மருத்துவரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ் அவசியம்..
அவசர மருத்துவ காரணங்களுக்காக பிஎஃப் பணத்தில் தங்கள் பங்குக்கு சமமான நிதியை வட்டியுடன் அல்லது அவர்களின் மாத சம்பளத்தின் ஆறு மடங்கு தொகையுடன் எடுக்கலாம். இதனை தனது மருத்துவ செலவுக்கோ அல்லது, பெற்றோர், மனைவி அல்லது குழந்தைகளின் மருத்துவ செலவை பயன்படுத்தலாம். அதே போல் ஒரு புதிய வீட்டை வாங்குவதற்கு அல்லது கட்டுவதற்கு பிஎஃப் கணக்கில் இருந்து முன்கூட்டியே பணம் எடுக்கலாம். வீட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு முன்பணத்தைப் பெறலாம்.
இதனிடையே இபிஎஃப்ஓ அமைப்பு யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN) அமைப்பையும் செயல்படுத்தியுள்ளது, இது முதலாளியின் சான்றொப்பம் இல்லாமல் உரிமைகோரல் சமர்ப்பிப்பை அனுமதிக்கிறது. பிஎஃப் பயனர்களின் UAN அவர்களின் ஆதார் மற்றும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டவுடன், சந்தாதாரர்கள் ஒரு முறை கடவுச்சொல் (OTP) மூலம் சரிபார்த்த பிறகு நேரடியாக EPFO க்கு உரிமைகோரல் படிவங்களை சமர்ப்பிக்கலாம்.