நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், அதாவது அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. பொருளாதார வல்லுனர்கள் டிசம்பர் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் என கணித்த போதும்கூட, அதனை விட அதிகமாக அளவீட்டை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி பதிவு செய்துள்ளது.
இந்த நிலையில், 2024 ஆண்டின் முடிவில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் 'எதிர்பார்த்ததை விட வலுவான' பொருளாதார தரவு உள்ளிட்டவைகளின் அடிப்படையில், ஏற்கனவே 6.1 சதவீதம் என கணிக்கப்பட்ட இந்தியாவின் வளர்ச்சியை, தற்போது 6.8 சதவீதமாக மூடிஸ் உயர்த்தியுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) நடப்பு 2023-24 நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் 8.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதன் விளைவாக 2023 ஆம் ஆண்டின் முடிவில் அந்த ஆண்டின் வளர்ச்சி 7.7 சதவீதம் என்பது சாத்தியமாகியுள்ளது. அரசாங்கத்தின் மூலதனச் செலவு மற்றும் வலுவான உற்பத்தி நடவடிக்கை ஆகியவை 2023 ஆம் ஆண்டில் வலுவான வளர்ச்சிக்கு அர்த்தமுள்ள வகையில் பங்களித்துள்ளன என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.
உலகளாவிய பொருளாதாரம் மங்கி வருவதால், இந்திய பொருளாதாரம் 6-7 சதவீத உண்மையான ஜிடிபி வளர்ச்சியை வசதியாக பதிவு செய்ய முடியும் என்றும், ஜி-20 பொருளாதாரங்களில் இந்தியா வேகமாக வளரும் நாடாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் மூடிஸ் கூறியுள்ளது.
2025 ஆம் ஆண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 6.4 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தின் வலுவான செப்டம்பர் மற்றும் டிசம்பர் காலாண்டின் வேகம் 2024ஆம் ஆண்டு மார்ச் காலாண்டில் தென்படுவதாக மூடிஸ் ஆய்வு நிறுவனம் கூறியுள்ளது. வலுவான ஜிஎஸ்டி வசூல், அதிகரித்து வரும் வாகன விற்பனை, நுகர்வோர் நம்பிக்கை மற்றும் இரட்டை இலக்க கடன் வளர்ச்சி ஆகியவை நகர்ப்புற நுகர்வு தேவை மீள்தன்மையுடன் இருப்பதாக தெரிவிப்பதாகவும் மூடிஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் இடைக்கால பட்ஜெட், 2024-25இல் (நிதியாண்டு 2025) 11.1 லட்சம் கோடி அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4 சதவீதம் மூலதனச் செலவு ஒதுக்கீட்டை இலக்காகக் கொண்டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டை விட 16.9 சதவீதம் அதிகமாகும். பொதுத் தேர்தலுக்குப் பிறகு இக்கொள்கைகள் தொடரும் எனவும், உள்கட்டமைப்பு மேம்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் எனவும் எதிர்பார்ப்பதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.