இந்தியாவின் மூன்றாவது பணக்காரர் ராதாகிஷன் தமானி சொத்து மதிப்பு 27.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள்
அம்பானி, அதானி ஆகியோரை பற்றி தொடர்ந்து கேள்வி பட்டிருப்போம். இந்திய பங்குச்சந்தையின் பிக்புல் எனப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா குறித்தும் அறிந்திருப்போம். ஆனால், பிக் புல்லுக்கே வழிகாட்டியாக இருந்தவர்தான் ராதாகிஷன் தமானி. அம்பானி, அதானிக்கு அடுத்து இந்தியாவின் 3ஆவது பெரும் பணக்காரார். இத்தனை பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும், ராதாகிஷன் தமானி மிகவும் எளிய மனிதர். அமைதியான சுபாவமுடையவர்.
ராதாகிஷன் தமானி 15 மார்ச் 1954 அன்று ஒரு இந்திய மார்வாரி குடும்பத்தில் பிறந்தவர். ராஜஸ்தானின் பிகானேரில் பிறந்து வளர்ந்த ராதாகிஷன் தமானி, எவ்வித பின்புலமும் இல்லாமல் சுயமாக படிப்படியாக வளர்ந்து கோடீஸ்வரர் ஆனவர். அவரது தந்தை சிறிய அளவில் வணிகம் செய்து வந்தவர். தமானியின் இந்த குடும்ப வணிகப் பின்னணி இயற்கையாகவே அவரை வணிகத்தில் நாட்டம் கொள்ள வழிவகுத்தது. மும்பை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்து வந்த அவர், தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டார்.
இதையடுத்து, அவரது தந்தையின் வணிகத்தை கவனித்து வந்த ராதாகிஷன் தமானி, தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு 1980 களின் பிற்பகுதியில் தயக்கத்துடன் பங்குச் சந்தையில் ஒரு தரகராக பணியில் சேர்ந்தார். 32 வயதில் பங்குத் தரகத்தைத் தொடங்கிய அவர், சந்தையில் இருந்து பணம் சம்பாதிக்க விரும்பினால், பங்குச் சந்தையில் தனது சொந்த பணத்தை முதலீடு செய்து வர்த்தகம் செய்ய வேண்டும் என்பதை விரைவாக உணர்ந்து கொண்டார். தொடர்ந்து, 1990களில் இந்திய பங்குச்சந்தையின் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரானார்.
மீண்டும் அதானி... ரகசிய முதலீடுகள் யாருடையவை? கேள்விகளால் துளைக்கும் ராகுல் காந்தி!
ராதாகிஷன் தமானி தனது பங்கு வர்த்தகத்தில் பெரும் லாபம் ஈட்டினார். பல்வேறு நுணுக்கங்களை பயன்படுத்தி லாபம் ஈட்டினார். இந்திய பங்குச்சந்தையின் பிக் புல் என அறியப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா ஒருமுறை இப்படிக் கூறினார். “கடவுளின் அருளும், மூத்தவர்களின் ஆசிர்வாதமும்தான் வாழ்க்கை என நான் கூற காரணம், எனக்கு ராதாகிஷன் தமானியை யாரும் அறிமுகப்படுத்தவில்லை. மும்பை பங்குச் சந்தை நகர வீதிகளில் நான் அவரை சந்தித்தேன்.” என்றார் மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா. ராதாகிஷன் தமானியை தனது வழிகாட்டியாகவும் ஜுன்ஜுன்வாலா பார்த்ததாக கூறப்படுகிறது.
சில்லறை விற்பனை, மின்சாரம் - உற்பத்தி மற்றும் விநியோகம், மதுபானங்கள் மற்றும் டிஸ்டில்லரிகள், மென்பொருள், நிதி, ரியல் எஸ்டேட், கூரியர், சிகரெட், ஹோட்டல்கள், இரசாயனங்கள் என பலவகைக்கப்பட்ட பல்துறை சார்ந்த பங்குகள் அவரது போர்ட்ஃபோலியோவில் உள்ளன.
தமானி பொது நிகழ்வுகளில் அரிதாகவே தோன்றுவார் மற்றும் பத்திரிகைகளிடம் பேசுவதைத் தவிர்க்கிறார். முழு வெள்ளை உடையை அணிவதால் தமானி பெரும்பாலும் ‘மிஸ்டர் ஒயிட் அண்ட் ஒயிட்’ என்று அழைக்கப்படுகிறார்.
பங்குச்சந்தையில் பெரிய உச்சத்தை எட்டிய ராதாகிஷன் தமானி, 2001இல் பங்குச்சந்தையில் இருந்து வெளியேறி, சில்லறை வணிகத்தில் நுழைய முடிவு செய்தார். 2002ஆம் ஆண்டில் டி-மார்ட் பல்பொருள் அங்காடியை உருவாக்கினார். மும்பை பவாயில்முதல் டி-மார்ட் கடை திறக்கப்பட்டது. தற்போது நாடு முழுவதும் டிமார்ட் பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்கள் உள்ளன.
இதற்குப் பிறகு, அவர் 2017 ஆம் ஆண்டில் அவென்யூ சூப்பர் மார்க்கெட் என்ற பெயரில் டி-மார்ட்டின் ஐபிஓவை அறிவித்தார். இந்த நிறுவனம் தற்போது நாட்டின் மதிப்புமிக்க 18வது நிறுவனமாக மாறியுள்ளது. இதன் மார்க்கெட் கேப் பஜாஜ் ஃபின்சர்வ் மற்றும் நெஸ்லேவை விட அதிகமாக உள்ளது. தற்போது 68 வயதாகும் ராதாகிஷன் தமானி, ஃபோர்ப்ஸ் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். உலகப் பணக்காரர்களின் பட்டியலில் 78ஆவது இடத்தை பிடித்துள்ளார். 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அவரது சொத்து மதிப்பு 27.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.