
மஹிந்திரா நிறுவனம் தனது XUV300 மாடலின் முழுமையான எலெக்ட்ரிக் வேரியண்ட் இந்தியாவில் 2023 மூன்று அல்லது நான்காவது காலாண்டு வாக்கில் அறிமுகமாகும் என அறிவித்து இருக்கிறது. மேலும் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் வெளியீடு பற்றிய திட்டங்கள் எதிர்காலத்தில் அறிவிக்கப்படும் என்றும் மஹிந்திரா அறிவித்து இருக்கிறது. புதிய XUV300 எலெக்ட்ரிக் மாடல் மஹிந்திரா நிறுவனத்தின் மிக முக்கிய மாடலாக அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் மஹிந்திரா எப்போதும் கவனமுடன் இருந்து வருகிறது. எனினும், பல்வேறு காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் மஹிந்திரா இன்னும் அதிக கவனம் செலுத்தாத நிலையில் உள்ளது. ஏற்கனவே டாடா மோட்டார்ஸ், ஹூண்டாய் மற்றும் எம்.ஜி. மோட்டார் போன்ற நிறுவனங்கள் தங்களின் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்து விட்டன. விரைவில் மாருதி சுசுகி நிறுவனமும் தனது எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சமீபத்திய அறிவிப்பின் மூலம் மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் தனது இடத்தை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள திட்டமிட்டு இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே e-KUV100 மாடலை சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்து இருந்தது. எனினும், இந்த மாடலின் உற்பத்தி பணிகள் இதுவரை துவங்கவில்லை.
2023 வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் மஹிந்திரா XUV300 எலெக்ட்ரிக் மாடல் டாடா நெக்சான் EV, எம்.ஜி. ZS EV மற்றும் ஹூண்டாய் கோனா EV போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். தற்போது மஹிந்திரா நிறுவனம் தனது இ வெரிட்டோ காம்பேக்ட் எலெக்ட்ரிக் செடான் மாடலை விற்பனை செய்து வருகிறது. இந்த மாடல் அரசு துறை நிறுவனங்கள் மற்றும் வாடகை நிறுவனங்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
"தற்போது மூன்று மற்றும் நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது கவனம் செலுத்தி வருகிறது. விரைவில் விரிவான எலெக்ட்ரிக் வாகன திட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவோம்," என மஹிந்திரா குழும நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி அனிஷ் ஷா தெரிவித்தார். அந்த வகையில் மஹிந்திரா e-KUV100 மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கலாம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.