அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசி நிறுவனம் செய்த முதலீட்டின் மதிப்பு இழப்பு 50 நாட்களில் ஏறக்குறைய ரூ.50ஆயிரம் கோடியை எட்டியுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன
அதானி குழுமப் பங்குகளில் எல்ஐசி நிறுவனம் செய்த முதலீட்டின் மதிப்பு இழப்பு 50 நாட்களில் ஏறக்குறைய ரூ.50ஆயிரம் கோடியை எட்டியுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன
அதானி குழுமத்தின் 7 நிறுவனங்களில் எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்திருந்தது. அதாவது, அதானி கிரீன் எனர்ஜி, அதானி என்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அம்புஜா சிமெண்ட்ஸ் மற்றும் ஏசிசி ஆகியவற்றில் எல்ஐசி முதலீடு செய்திருந்தது.
இந்த 7 நிறுவனங்களின் பங்கு மதிப்பு 2022, டிசம்பர் 31ம் தேதி ரூ.82,970 கோடியாக இருந்தது, ஆனால், 2023, பிப்ரவரி 23(நேற்று) இந்த 7 நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.33,242 கோடியாக வீழ்ச்சி அடைந்தது.
இந்த கணக்கீடு என்பது, அதானி பங்குகளின் 2022, டிசம்பர் 31ம் தேதி சந்தை மதிப்புக்கும், நேற்றைய சந்தை மதிப்புக்கும் இடையிலான வேறுபாட்டையே குறிக்கிறது என்று பிஸ்னஸ் டுடே இதழ் தெரிவித்துள்ளது.
இந்தியப் பங்குச்சந்தையில் அதானி குழுமம் செய்த மோசடிகள், போலி நிறுவனங்கள் வாயிலாக நடத்திய பணப்பரிவர்த்தனை குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜனவரி 24ம் தேதி அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கைக்குப்பின் அதானி குழுமத்தின் பங்குகள் சீட்டுக்கட்டுப் போல் சரிந்து வருகிறது.
கடந்த ஓர் ஆண்டில் அதானி டோட்டல் கேஸ் பங்கு மதிப்பு 78% சரிந்துள்ளது . அதானி கிரீன் எனர்ஜி 73.50%, அதானி டிரான்ஸ்மிஷன் 71.10%, அதானி என்டர்பிரைசர்ஸ் 64.10 சதவீதம் வீழ்ந்துள்ளது. அதானி பவர் 48.40%, என்டிடிவி 41.80% சரிந்துள்ளது. அதானி குழுமத்தின் மற்ற நிறுவனங்களான அதானி போர்ட்ஸ, ஏசிசி ஆகியவை 28 முதல் 40% வரை சரிந்துள்ளன
கடந்த ஜனவரி 30ம் தேதி எல்ஐசி நிறுவனம் செபியில் பைலிங்கில் தெரிவித்தபோது, எல்ஐசி வைத்திருக்கும் அதானி குழுமத்தின் உள்ள பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.56,142 கோடி. இதை ரூ.30,127 கோடிக்கு வாங்கினோம் எனத் தெரிவித்தது.
இந்த கணக்கீடு ஊகத்தின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டுள்ளது. அதாவது எல்ஐசி நிறுவனம் ஜனவரி 30ம் தேதி கூறுகையில் அதானி குழுமத்தின் பங்குகளை ரூ.30,127 கோடிக்கு வாங்கினோம், பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.56,142 கோடியாக இருக்கிறது எனத் தெரிவித்திருந்தது.
வளர்ச்சியும் சரிவும்| டாப்-25 கோடீஸ்வரர்கள் வரிசையில்கூட அதானி இல்லை!
ஆனால் அதானி குழுமத்தில் உள்ள எல்ஐசி முதலீடு செய்துள்ள 7 நிறுவனங்களின் பங்குகள் சந்தை மதிப்பு கடந்த 2022, டிசம்பர் 31ல் ரூ.82,970 கோடியாக இருந்தது. தொடர்ச்சியான சரிவால் இந்த 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு நேற்று, ரூ.33,242 கோடியாக வீழ்ச்சி அடைந்தது. ஆகவே, எல்ஐசி நிறுவனத்துக்கு ஏறக்குறைய ரூ.50ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்
அதாவது, எல்ஐசி நிறுவனம், அதானி குழுமத்தில் உள்ள 7நிறுவனங்களில் ரூ.30,127 கோடி முதலீடு செய்துள்ளது. ஆனால், இந்த 7 நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பால் எல்ஐசி முதலீடு செய்துள்ள ரூ.30,127 கோடியின் மதிப்பு நேற்று ரூ.26,861 கோடியாகக் குறைந்தது.
அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு கடந்த ஒரு மாதத்தில் 61 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் ரூ.19.18 லட்சம் கோடியாக இருந்த நிலையில், நேற்று ரூ.7.36 லட்சம் கோடியாக வீழ்ந்துள்ளது. அதாவது எல்ஐசி நிறுவனம் அதானி குழுமத்தில் வாங்கிய பங்குகளின் மதிப்பு வாங்கிய விலையைவிடக் குறைந்துள்ளது.