
எல்ஐசி ஐபிஓ எப்போது நடத்துவது என்பது குறித்த புதிய தேதியை மத்திய அரசு ஒரு வாரத்தில் அறிவிக்கும் எனத் தெரிகிறது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
5 சதவீதப் பங்குகள்
மத்திய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 % பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது. வரும் மார்ச் 11ம்தேதி எல்ஐசி நிறுவனத்தின் பங்கு விற்பனை இருக்கலாம்.
ரூ.65 ஆயிரம் கோடி
இந்த 5% சதவீதப் பங்குகளை விற்று ரூ.65ஆயிரம் கோடி முதல் ரூ.75 ஆயிரம் கோடிவரை திரட்ட மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படஉள்ளன.
இதில் பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் தள்ளுபடி தரப்பட உள்ளது. பாலிசிதாரர்கள் பங்குகளை வாங்க விரும்பினால், அவர்கள் பாலிசியுடன் பான் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதற்கான கடைசித் தேதியும் முடிந்துவிட்டது.
மே 12ம்தேதி
எல்ஐசி ஐபிஓ வெளியிட சந்தை ஒழுங்கமைப்புக் கட்டுப்பாட்டு அமைப்பான செபி மத்திய அரசுக்கு மே 12ம்தேதிவரைதான் அனுமதி வழங்கியுள்ளது. இதற்குள் பங்குகளை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் புதிதாக செபியிடம் மத்திய அரசு பங்குவெளியீடு ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும். ஆதலால், மே 12ம் தேதிக்குள் எல்ஐசி ஐபிஓ இருக்கும் எனத் தகவல்கள் வெளியாகின. இதன்படி ஒருவாரத்துக்குள் மத்திய அரசு ஐபிஓ வெளியீடு குறித்து புதிய முடிவை எடுக்கும் எனத் தெரிகிறது.
கடினமான முடிவு
மத்திய நிதிஅமைச்சகத்தில் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறுகையில் “ உள்நாட்டில் சில்லரை மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்கள் விருப்பப்படி நடப்பதா அல்லது சர்வதேச சூழல், ரஷ்யா உக்ரைன் போர்நிலவரம் ஆகியவற்றுக்காக காத்திருந்து எல்ஐசி ஐபிஓ வெளியிடுவதா என்பதில் முடிவு எடுப்பது கடினமானது. சர்வதேச காரணிகளை அடிப்படையாக வைத்துதான் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவார்கள்.
ஒரு வாரத்தில் முடிவு
ஆதலால் எல்ஐசி ஐபிஓ விற்பனை தேதி, நேரம் குறித்து மத்திய அரசு ஒரு வாரத்துக்குள் முக்கிய முடிவை அறிவிக்கும். ஐபிஓ விலை குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. லிஸ்டிங்கின்போது எடுக்கப்படும் முடிவில் பங்கு மதிப்பு உ யர்ந்தால், அது முதலீட்டாளர்களுக்கு லாபம்தான். ஒருவேளை ஐபிஓ வெளியீடு ஆகஸ்டு அல்லது செப்டம்பர் மாதம் இருந்தால், எல்ஐசி காலாண்டு முடிவுகளையும் சேர்த்து, புதிதாக மத்திய அரசு செபியிடம் விண்ணப்பிக்கும். ஆனால், மத்திய அரசு மே 12-ம் தேதிக்குள் முடிவு எடுக்கும். பங்கு விற்பனையும் 5 சதவீத பங்குகளுக்கு மேல் இருக்க வாய்பில்லை. ” எனத் தெரிவித்தார்
எல்ஐசி நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு 2021, செப்டம்பர் 30ம் தேதி நிலவரப்படி ரூ.5.40 லட்சம் கோடியாகும். இப்போது கணக்கிட்டால் அதைவிட 2 முதல் 3 மடங்கு அதிகரிக்கும். மத்திய அரசு தன்னிடம் இருக்கும் 100 சதவீத பங்குகளில் 5 சதவீதம் அல்லது 31.60 கோடி பங்குகளை வெளியிட்டு, அதன் மூலம் ரூ.65 ஆயிரம் கோடி திரட்ட முடிவு செய்துள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.