cyrus mistry: seat belt:tata sons: சைரஸ் மிஸ்திரி மரணம் சொல்லும் செய்தி என்ன? காரில் பேக்-சீட் பெல்ட் அவசியமா?

By Pothy RajFirst Published Sep 6, 2022, 10:17 AM IST
Highlights

மரணத்தை போன்ற ஒரு பாடசாலை வேறு எதுவும் கிடையாது எப்போதுமே ஒன்றை இழந்த பின்னர் தான் அதன் மதிப்பும் மரியாதையும் நமக்கு ஓங்கி உறைக்கும்

மரணத்தை போன்ற ஒரு பாடசாலை வேறு எதுவும் கிடையாது எப்போதுமே ஒன்றை இழந்த பின்னர் தான் அதன் மதிப்பும் மரியாதையும் நமக்கு ஓங்கி உறைக்கும்

 யாருக்கும் அகப்படாமலும், கட்டுப்படாமலும், புரிதல்களுக்கு அப்பாற்பட்டும் இருப்பதாலோ என்னவோதான் மரணத்தின் மீது மிகுந்த மரியாதையும் அச்சமும் கொண்டிருக்கிறோம். மரணத்தால் நமக்கு கிடைக்கும் பாடங்கள் ஏராளம். அதில் டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி மரணமும் சில பாடங்களை நமக்கு உணர்த்திவிட்டு சென்றுள்ளது.

சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான விபத்துகள்,உயிரிழப்புகள் நடக்கின்றன. அவையெல்லாம் செய்தியாவதில்லை, கவனத்தை ஈர்ப்பதில்லை. ஆனால், சைரஸ் மிஸ்திரி போன்ற கோடீஸ்வரர் விபத்தில் சிக்கும்போது, அந்த விபத்து உணர்த்தும் செய்தியை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

உலகிலேயே  அதிகபாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார் எனச் சொல்லப்டும் மெர்சடிஸ் பென்ஸ் GLC220d 4MATIC காரில்தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத் சென்றுவிட்டு மும்பைக்கு டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி திரும்பினார்.அவருடன் 4 பேர் காரில் பயணித்தனர்.

பால்கர் மாவட்டம், சரோட்டி சோதனைச் சாவடியில் இருந்து 20 கி.மீ தொலைவில் சூர்ய நதி ஆற்றுப்பாலத்தில் வந்தபோது மிஸ்திரி சென்ற கார் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.  சோதனைச் சாவடியிலிருந்து ஏறக்குறைய 9 நிமிடங்களில் 20 கி.மீ தொலைவை மின்னல் வேகத்தில் கார் கடந்தது. அப்போது, ஆற்றுப்பாலத்தின் மீது மற்றொரு காரை முந்திச்செல்ல முயன்றபோது சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் சிக்கியது என்று போலீஸார் தெரிவிக்கிறார்கள்.

இந்தவிபத்தில் மிஸ்திரியுடன் சேர்ந்து ஜஹாங்கிர் பாந்தோல் உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த மருத்துவர் அனாஹிதா பாந்தோல், அவரின் கணவர் தாரியஸ் பாந்தோல் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.

இந்த விபத்துக்கான முக்கியக் காரணமாக போலீஸார் தரப்பில் கூறப்படுவது " கார் அதிகவேகமாக இயக்கப்பட்டதும், காரில் பின்னால் அமர்ந்திருந்த சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை" என்பதுதான்.

சாதாரண காரைப் போல் அல்ல பென்ஸ் ஜிஎல்சி 220டி கார். இந்த காரில் மொத்தம் 7 ஏர்பேக்குகள் உள்ளன. ஆனால், பின்னால் அமர்ந்திருக்கும் பணிகளைக் காக்க மட்டும் முன்பக்க ஏர்பேக்குகள் இல்லை. ஆனால் மற்ற காரில் இல்லாத வகையில் எஸ்ஆர்எஸ் என்ற பாதுகாப்பு அம்சமும் உள்ளது. சீட் பெல்ட் மட்டும்அணிந்திருந்தால், ஏர்பேக்குகள் நம்மை காக்கும் வகையில் பாதுகாப்பு அம்சம் இருந்தது. 

சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாததால்தான் கார் அதிவேகத்தில் சென்று மோதியபோது, மிஸ்திரி கடுமையாக பாதிக்கப்பட்டு சம்பவஇடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

சீட் பெல்ட் முக்கியத்துவம் குறித்து மகிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மகிந்திரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ நான் காரில் பின்பக்கம் எப்போது அமர்ந்து சென்றாலும் சீட் பெல்ட் அணிந்திருப்பேன். ஆதலால், காரில் செல்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிவோம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள். நமது குடும்பத்தாரையும் உறுதி ஏற்கவைப்போம்” எனத் தெரிவித்தார்

சைரஸ் மிஸ்திரி சென்ற மெர்சடிஸ் பென்ஸ் GLC 220d 4MATIC ரக கார் அனைத்து வீல்களும் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதன் விலைரூ.68 லட்சம். இந்த காரில் ப்ரீ சேப்டி சிஸ்டம் உள்ளது. அதாவது விபத்து நேரத்தில் முன்பக்கம் அமர்ந்திருப்பவர்கள் சீட்பெல்ட் தானாக இறுகிக்கொண்டு அவர்களை முன்னே செல்லவிடாமல் தடுத்துவிடும்.

விபத்து நேரத்தில் மட்டுமல்ல, காரை வேகமாக பிரேக் போட்டு நிறுத்தும்போதுகூட இந்தஅம்சம் செயல்படும். இது தவிர முழங்கால்களை பாதுகாக்கும் நீ-பேக், கார் ஸ்டீரிங் முகத்தில் மோதாதவகையில் பாதுகாப்பு, டேஷ்போர்ட் மீது மோதி காயம் ஏற்படாமல் தடுக்கும் வசதி, டயர் பிரஷர் கண்காணிப்பு என ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இருந்தும் சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியாதது அவரின் உயிரைக் குடித்துவிட்டது

காரில் சீட் பெல்ட் அணிவது கட்டாயமா

2019ம் ஆண்டு savelife என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், காரின் பின்பகுதியில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கும் சீட் பெல்ட் அவசியம் என்பதை வலியுறுத்தியது. இந்த ஆய்வில் வெறும் ஒரு சதவீதம் பேர் மட்டுமே காரின் பின்பகுதியில் அமரும்போது சீட் பெல்ட் அணிகிறார்கள்.

37.8% பயணிகள் காரின் பின்பகுதியில் அமரும்போது சீட் பெல்ட் அணிவதில்லை. 23.9% பயணிகளுக்கு காரின் பின்பகுதியில் சீட் பெல்ட் இருப்பதுகூட தெரியவில்லை. அதிலும் காரில் பயணிக்கும் குழந்தைகளில் 77 சதவீதம் பேர் சீட்பெல்ட் அணிவதில்லை. 

நம் நாட்டைப் பொறுத்தவரை காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும். மத்திய மோட்டார் வாகன விதி 138(3)ன் கீழ் பின்பக்கம், முன்பக்கம் அமர்பவர்கள் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிய வேண்டும். அவ்வாறு அணியாவிட்டால் ரூ.1000வரை அபராதம் விதிக்கலாம்.

2021 என்சிஆர்பி அறிக்கையில்கூட, 2021ம் ஆண்டில் சாலை விபத்துகளில் 1.55 லட்சம் பேர் உயிரவந்துள்ளனர். 4.30 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சுகாதார அமைப்பு அறிக்கையின்படி, “ சாலை விபத்துகள் நடக்கும்போது, காரில் சீட் பெல்ட் அணியாமல் இருப்போரில் 70 சதவீதம் பேர் கார் மணிக்கு 50 கி.மீ வேகத்துக்கும் குறைவாகச்சென்று விபத்தில் சிக்கினாலே அவர்களின் உயிரைக் காப்பாற்றுவது கடினம். சீட்பெல்ட் அணியாமல் விபத்தில் சிக்குவது என்பது 4வது மாடியில் இருந்து விழுவதற்கு சமம்." எனத் தெரிவிக்கிறது

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கடந்த பிப்ரவரி மாத அறிக்கையில் “ காரின் பக்க இருக்கையில் அமர்வோர், நடுவில் அமர்பவர்கள் Y வடிவத்தில் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும்” என அறிவுறுத்தியது

கார் ஓட்டுநர், காரின் முன்பகுதியில் அமர்வோர், பின்னால் அமர்ந்திருப்போர் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்று மத்திய அரசு விதிகள் கொண்டுவந்தபோதிலும் அதை கடைபிடிக்க மக்கள் மறுக்கிறார்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், போலீஸாரும் வாகனச் சோதனையின்போது சீட் பெல்ட் அவசியத்தையும் உணர்த்தவும் தவறிவிடுகிறார்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இல்லை.

சீட் பெல்ட் அணிவதை தீவிரமாக நடைமுறைப்படுத்துதல், காரில் சீட் பெல்ட் அணிய சொல்லும்அலாரம் வைத்தல், சீட் பெல்ட் அணியாமல் கார் நகர்ந்தால் எச்சரிக்கை மணி அடித்தல், கடும் அபராதம் விதித்தல், கடுமையான சோதனை செய்தல் போன்றவை மூலம்தான் சீட் பெல்ட் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.

சீட் பெல்ட் அணிவதின் அவசியத்தைதான் சைரஸ் மிஸ்திரியின் மரணம் விட்டுச் சென்றுள்ளது.

click me!