
Stock Market Crash Today: இந்திய பங்குச் சந்தையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று வர்த்தகம் பெரிய அளவில் விற்பனையுடனும், சரிவுடனும் தொடங்கியது. NSE எனப்படும் நிஃப்டி மற்றும் BSE எனப்படும் சென்செக்ஸ் ஏப்ரல் 7 அன்று 3.5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து 10 மாதங்கள் குறைந்த அளவை எட்டியது. உலகளாவிய சந்தைகள் இன்னும் மோசமான சரிவைக் கண்டாலும், உள்நாட்டு சந்தையில் ரத்தக்களரி ஏற்பட்டுள்ளது. சந்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே டோக்கியோவின் நிக்கி 225 குறியீடு கிட்டத்தட்ட 8% சரிந்தது. ஆஸ்திரேலியாவின் S&P/ASX 200 6% க்கும் அதிகமாக சரிந்தது. தென் கொரியாவின் கோஸ்பி 4.4% சரிந்தது.
Sensex, Nifty down:
பங்குச் சந்தையின் தொடக்க வர்த்தகத்தில் BSE சென்செக்ஸ் 3,939.68 புள்ளிகள் சரிந்து 71,425.01 ஆக இருந்தது. NSE நிஃப்டி 1,160.8 புள்ளிகள் சரிந்து 21,743.65 ஆக இருந்தது. கடந்த பத்து மாதங்களுக்குப் பின்னர் பங்குச் சந்தை இன்று பெரிய அளவில் சரிந்து முதலீட்டாளர்களின் முதலீட்டை காலி செய்தது. இன்று மட்டும் முதலீட்டளர்கள் சுமார் 20 லட்சம் கோடி வரை பணத்தை சந்தையில் இழந்துள்ளனர். ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வரியை டிரம்ப் விதித்து இருக்கிறார். இந்தியாவிற்கு 26% வரி விதிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக அனைத்து நாடுகளுக்கும் 10% அடிப்படை வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் சென்செக்ஸ், நிப்டி வரலாறு காணாத சரிவு; கரடியின் ஆட்டம் ஆரம்பமா?
US Recession Fear:
புதிய வரி விதிப்பைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வீழ்ச்சியடைந்து வரும் வளர்ச்சிக்கு இடையே அமெரிக்கா மந்தநிலைக்குச் செல்லும் என்று ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். கோல்ட்மேன் சாக்ஸ் என்ற அமெரிக்க கருத்துக்கணிப்பு நிறுவனம் அமெரிக்க மந்தநிலை வாய்ப்பை 45% ஆக உயர்த்தியுள்ளது. முன்பு 35% ஆக இருக்கும் என்று கணித்து இருந்தது.
நிப்டி மெட்டல் சரிவு:
அனைத்து துறைகளும் இன்று சரிவில் காணப்பட்டன. நிப்டி மெட்டல் 6 சதவீதத்திற்கும் மேலாக மிக மோசமான பாதிப்பை சந்தித்தது. நிப்டி ஐடி மற்றும் நிப்டி ஆட்டோ இரண்டும் குறிப்பிடத்தக்க இழப்புகளைச் சந்தித்தன. 4 முதல் 5 சதவீதம் வரை சரிந்தன. இதற்கிடையில், இந்திய பங்குச் சந்தையை கணிக்கும் volatility index குறியீடு - 55 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, 21 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, முதலீட்டாளர்களிடையே கூடுதல் அச்சத்தை வெளிப்படுத்தியது. மிட் கேப் மற்றும் ஸ்மால் கேப் பங்குச் சந்தை இரண்டும் தனித்தனியாக மூன்று சதவீதத்திற்கும் மேல் குறைந்தது.
Trump Tariff on India: இந்தியாவின் ராஜதந்திரம் என்ன? டிரம்புக்கு அடிபணியுமா?
நிப்டியில் தற்போது முதலீடு செய்யலாமா?
வர்த்தகப் போர் கவலை உலகெங்கிலும் முதலீட்டாளர்களை அழுத்தத்தில் வைத்துள்ளது. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. நிஃப்டி மற்றும் மிட்கேப் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் கடந்த வாரம் தொடர்ச்சியான நிச்சயமற்ற தன்மையின் காரணமாக 2% க்கும் அதிகமாக இழந்தன. பலவீனமான உலகளாவிய சந்தைகள் மற்றும் FII எனப்படும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுச் செல்வது அச்சத்தை அதிகரித்துள்ளது. எனவே இதை கருத்தில் கொண்டு நிப்டி மீண்டும் 22,800 புள்ளிகளுக்கு மேல் செல்லும் வரை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பங்குச் சந்தை வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தியா பெரிய அளவில் பாதிக்காது:
மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா குறைந்த அளவில் தான் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. அதாவது ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் இரண்டு சதவீதம் தான் ஏற்றுமதி செய்கிறது. இதனால், அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பு இந்தியா மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்தியா அமெரிக்கா பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம்:
மேலும், அமெரிக்காவுடன் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் செய்வதற்கு இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதனால் வரி விகிதத்தில் இந்தியாவுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. மேலும், உள்நாட்டு நுகர்வுகளான நிதி, விமானப் போக்குவரத்து, ஹோட்டல்கள், ஆட்டோக்கள், சிமென்ட், பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நிறுவனங்கள் தற்போதைய நெருக்கடியிலிருந்து ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாமல் தப்பிக்க வாய்ப்புள்ளது. தற்போது விதித்து இருக்கும் வரியால் அமெரிக்காவுக்கு பலத்த அடி கிடைத்து இருப்பதால், மேலும் மருந்துகளின் மீது வரி போட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.